சென்னை,
சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஒழுங்காக செயல்படாததால் அது தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள் புதனன்று(ஆக.1) நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பாக செயல்படவில்லை என்று அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார். மேலும், நீதிமன்றத்தால் இந்த பிரிவு அமைக்கப்பட்டு ஓராண்டாகியும் இதுவரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் அரசுக்கு ஒரு விசாரணை அறிக்கைக் கூட வழங்கவில்லை என்றும் தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார். சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ தான் விசாரிக்கும் என்றும் அரவிந்த் பாண் டியன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “மாநில அரசின் காவல்துறை மீது உங்களுக்கே நம்பிக்கையில்லையா” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு வழக்குரைஞர், “காவல்துறை விசாரித்தவரை முறையாகத்தான் இருந்தது, ஆனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்ட ஓராண்டில் என்ன நடந்தது என தெரியவில்லை” என தெரிவித்தார். சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்று பொன்.மாணிக்கவேல் தரப்பு தெரிவித்தது. இதுகுறித்து சிலைக் கடத்தல் தரப்பு வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் அரசின் கொள்கை முடிவை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் விசாரணை நிலைஅறிக்கையும், சிலைகளை வைப்பதற்கான ஸ்ட்ராங் ரூம்கள் அமைப்பதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.