சென்னை,
சேலம் – சென்னை எட்டு வழி சுங்கச் சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத் துக்கு தடை விதித்திருப்பதற்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் நடைபயணத்திற்கு தடை விதிப்பது ஜனநாயக விரோதம். தடையை மீறி அவர் கள் செல்வதை வரவேற்பதோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவர்கள் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளின் விளைநிலங்களையும், அவர்களின் வாழ்வாதாரங்களையும் பாதிக்கின்ற சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று (ஆக. 1) திருவண்ணாமலை முதல் சேலம் வரை நடைபயணத்திற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு நடைபயணத்திற்கு அனுமதி மறுத்ததுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உட்பட பலரை கைது செய்திருக்கிறது. இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல் என்பதோடு, அரசியல் சாசனத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக கருத்து கூறுவதும், போராடுவதும் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையாகும்.இதனை தமிழக அரசு தொடர்ந்து மீறுவதால் பல்வேறு தருணங்களில் நீதிமன்றத்தை நாடுவதும், நீதிமன்றம் அனுமதி அளிப்பதும் என்பது நடைமுறையாகி வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டத்திற்கு உட்பட்ட ஜனநாயகப் பூர்வமான போராட்டங்களைக் கூட தமிழக அரசு தொடர்ந்து அடக்கி, ஒடுக்க நினைப்பது ஏற்புடையதல்ல. கைது செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்வதோடு, நடைபயணத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.