பாரதம் 2019 என்ற சினிமா தயாராகிறது. ஷூட்டிங் நடைபெறத் தொடங்கியிருக்கிறது. படத்தயாரிப்பாளர், இயக்குநர் மட்டுமல்ல, கதை, திரைக்கதை, வசனம், இசை, நடிப்பு, பாடல் என எல்லாமே 56 இன்ச் மார்பழகன், பாடி ஃபிட்னெஸ் புகழ்.. சுப்ரீம் கமாண்டர் நரேந்திர மோடிதான் என்ற விவரம் தெரியாதவர் அரசியலில் அரிச்சுவடி அறியாதவர். மோடி எழுதிய பாடல்களை மோடியே பாடப்போகிறார் என்பதைக் கேட்டு எல்லோருக்கும் அதிர்ச்சி. “பாடல்களை நீங்கள் எழுதுவது சரி, தொலையட்டும்..

பாடுவது வேறு யாராவது நல்ல பாடகராக இருக்கட்டுமே” என இணை இயக்குநர்களில் ஒருவரான ராஜ்நாத் சிங் கெஞ்சிப் பார்த்தார். “எனக்கு டிரம்ஸ் வாசிக்கத் தெரியும்..பியானோ வாசிக்கத் தெரியும்.. பிடில் வாசிக்கத் தெரியும்.. பாட முடியாதா?” என்று மோடி எகிறவும் “நீங்க பாடிடுவீங்க.. யார் கேக்கறது?” என யார் காதிலும் விழாமல் முணுமுணுத்தபடி அடங்கினார் ராஜ்நாத். படத்தின் சில டீசர்கள் வெளிவந்துவிட்டன. அவற்றைப் பார்ப்போம்..

சீன் 1 :
மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா: நாம இனிமே தேர்தலே நடத்த வேணாம். 2014-லே நடந்ததுதான் பாரதத்தில் நாடாளுமன்றத்துக்கு நடந்த கடைசித் தேர்தல். ராமராஜ்யம் நடத்திக்கிட்டிக்கோம்.. ராமர் என்ன தேர்தலா நடத்தினார்? (கைதட்டல்)

ராஜ்நாத் சிங் : காங்கிரஸ்-முக்த் பாரதம் வேணுங்கறோம். தேர்தல் நடந்து பிஜேபி-முக்த் பாரதம் உருவாயிடிச்சுன்னா? அதனாலே ஜெயந்த்பாய்.. மாப் கீஜியே.. ஜெயந்த்ஜீ சொல்றதுதான் கரெக்ட்!

சுப்ரீம் கமாண்டர் மோடி: தேர்தலே வேணாம்கறதுதான் நம்ம கொள்கை. ஆனா அந்த முடிவை இப்ப எடுக்க முடியாது. 2019-லே ஜெயிச்சு வந்தபிறகு அந்த அஜெண்டாவுக்குப் போவோம். ஜனங்க இன்னும் என்னை முழுசாக் கைவிட்டுறலை. என்ன, 2019 தேர்தல் கூட்டங்கள்லே கையை இன்னும் தூக்கணும்.. குரலை இன்னும் உயர்த்தணும். அதையெல்லாம் நான் பாத்துக்கறேன். அதானி, அம்பானி கிட்ட சொல்லி பிராக்டீசை உடனே ஆரம்பிக்கணும். ஸ்டார்ட் அப் இந்தியா, அச்சே தின் மாதிரி புதுசா வேற சில ஸ்லோகன்களைக் கண்டுபிடிக்கணும். அவ்வளவு தானே?

ஹர்ஷ் வர்தன்: போன தடவை உருவாக்கின ஸ்லோகன்கள்ல கூட டிஜிட்டல் இந்தியா-ங்கறதுக்குப் பதிலா டிஜிட்டல் பாரதம்னு இருந்திருக்கணும்..

மோடி: அந்தமாதிரி ஸ்லிப் வராம இந்த தடவை பாத்துக்கறேன்.

சீன் 2:
தமிழிசை: இன்னிக்கு தமிழ்நாட்டிலே விவசாயம், மீத்தேன் திட்டம், நீட் எக்சாம்,  எட்டுவழிச் சாலைன்னு நாலா பக்கத்திலேயும் நடக்கற வளர்ச்சியின் வேகத்தைப் பார்த்து தமிழர்கள் மிரண்டு போய் இருக்காங்க. எல்லாத்துக்கும் சர்வவல்லமையுள்ள மோடிதான் காரணம். அவரை மாதிரிதிறமையான பிரதமரை நாடு இதுவரை சந்திச்சதில்லை. அதனாலே தமிழகத்திலே தாமரை மலர்ந்தே தீரும்! (கைதட்டல்)

எச்.ராஜா: திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளைப் பார்த்து இங்கே நொந்துபோய் கெடக்காங்க. இப்படி ஆன்ட்டி-இன்டியன்சைக் கொண்டுவந்து தமிழகத்துக்கு துரோகம் பண்ணிட்டுப் போய்ட்டார் பெரியார். இப்ப அவர் உயிரோட இருந்திருந்தா புழல் சிறையிலேதான் இருந்திருப்பாரு..

பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழகத்திலே இவ்வளவு போராட்டங்கள் முன்னாலே நடந்திருக்கா? இப்ப ஏன் இப்படி போராட்டக்களமா மாறியிருக்கு? நக்சலைட்டுகள் சந்துபொந்தெல்லாம் பரவிட்டாங்க. அவங்களைக் கட்டுப்படுத்தத் துப்பில்லாத ஆட்சி இங்கே நடந்துக்கிட்டிருக்கு. ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆட்சிக்கு நல்ல பாடம் கற்பிக்கணும்.

தமிழிசை: கரெக்ட்! அவங்க கூட கூட்டு சேர்ந்துதான் அவங்களுக்குப் பாடம் நடத்த முடியும். நாம கொண்டு வந்த பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி எல்லாத்தையும் ஜனங்க மறக்கணும்னா ரஜினியின் ஆன்மீக அரசியல், யோகா, தியானம் எல்லாம் வந்தாத்தான் முடியும். தமிழகத்திலே தாமரை…

எச்.ராஜா (இடைமறித்து): அக்கா! இதை அடிக்கடி சொல்லாதீங்க. ஜனங்க போரடிச்சுப் போய் நமக்குப் போடறதுக்குப் பதிலா நோட்டாவுக்குப் போட்டுட்டுப் போயிடப் போறாங்க! பீ கேர்ஃபுல்!

சீன் 3:
பிப்லவ் குமார் தேவ்: ராமாயண காலத்திலேயே ஷேர் ஆட்டோ, ஓலா, உபெர் எல்லாம் இருந்திருக்கு. கூனியோட முதுகு ஏன் வளைஞ்சு போச்சு? ஷேர் ஆட்டோவிலே அடிக்கடி போய்த்தான்!

ஜெயந்த் சின்ஹா: அயோத்திக்கும் சிறீலங்காப் பட்டணத்துக்கும் இடையிலே புல்லட் டிரெயின் ஓடியிருக்கு. ராவணன் சீதையைக் கடத்தும்போது முதல்லே புல்லட் டிரெயின்லதான் கொண்டுபோக நெனச்சான். அதிலே பிரிமியம் தட்கல் டிக்கெட் கூட கிடைக்கலைன்னதும்தான் புஷ்பக விமானத்திலே கொண்டு போயிருக்கான். இதையெல்லாம் பாடத்திட்டத் திலே சேர்க்கணும். வருங்காலத் தலைமுறைக்கு சரியான வரலாற்றைச் சொல்லித் தரணும், இல்லியா? (கைதட்டல்)

சீன் 4:
பசுமாடு ஒன்றின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறைப் பிடித்தபடி முகமது ஷபீக் நின்று கொண்டிருக்கிறார். மோடி இருகரமும் நீட்டியபடி வருகிறார். ஷபீக்கிற்கு ஆனந்தம் தாங்கவில்லை. பிரதமரே தன்னைக் கட்டித் தழுவ வருகிறார் என நினைத்து தானும் இருகரம் நீட்டியபடி முன்னேறுகிறார். ஷபீக்கைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் மோடி பசுமாட்டைக் கட்டித் தழுவுகிறார். பசுக்குண்டர்கள் வந்து ஷபீக்கை அடிக்கத் தொடங்குகிறார்கள். “பசுமாட்டையா கடத்தறே? உன்னை பீஸ்பீஸா வெட்டித் தூக்கிப் போட்டாதான் உங்களுக்கெல்லாம் பயம் இருக்கும்” என்று கத்தியபடி ஷபீக்கை இழுத்துச் செல்கிறார்கள். மோடி பசுமாட்டை அணைத்தபடி இதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். “கோமாதா எங்கள் குலமாதா” என்ற பாடல் ஒலிக்கத் தொடங்குகிறது.

கற்பனை: ராஜகுரு

Leave a Reply

You must be logged in to post a comment.