புதுதில்லி, ஆக.1-

அஸ்ஸாமில்,  குடிமக்களுக்கான தேசியப் பதிவேட்டில் இந்தியர் எவரும் நீக்கப்படக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

குடிமக்களுக்கான தேசியப் பதிவேடு என்பது அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். அந்த ஒப்பந்தத்தில் அஸ்ஸாமில் தங்கியிருக்கிற புலம்பெயர்ந்தவர்களில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்கள்  குறித்துத் தீர்மானித்திட 1971ஆம் ஆண்டை இறுதி நாளாக (cut off date-ஆக) நிர்ணயித்திருந்தது. அத்தகைய தொரு பதிவேட்டைத் தயாரிப்பதற்கான பணி, உச்சநீதிமன்றம் இதில் தலையிடும்வரையிலும் நடைபெறவில்லை. பின்னர் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வையின்கீழ் குடிமக்களுக்கான தேசியப் பதிவேட்டின் வரைவு தயாரிக்கப்பட்டிருக்கிறது.

வரைவு தயாரிக்கப்பட்டதில் ஏராளமான குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. மக்களுடைய பஞ்சாயத்து ஆவணத்தை முறைப்படி அமைந்ததொரு ஆவணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்த போதிலும் கூட, ஏராளமான எண்ணிக்கையில் பெண்கள் விடுபட்டிருக்கின்றனர். கள ஆய்வின்போதும் முறையற்ற செயல்களின் காரணமாகவும் நிறைய பேர் விடுபட்டதாக முறையீடுகள் வந்துள்ளன. சில வழக்குகளில், ரேஷன் அட்டைகளை  ஆதாரமாகக் காட்டப்பட்டபோது, அவற்றை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தில் சிலர் மட்டும் சேர்க்கப்பட்டு, பலர் விடுபட்டிருப்பது விந்தையாக இருக்கிறது. இவற்றின்காரணமாகத்தான் வரைவு குடிமக்கள் தேசியப் பதிவேட்டில் 40 லட்சம் பெயர்கள் இல்லாதது ஐயுறவையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு விடுபட்டிருப்பது தொடர்பாக வந்துள்ள அனைத்துப் புகார்களும் முழுமையாகவும் ஆழமாகவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சரிசெய்யப்பட வேண்டும். தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும் என்று மக்கள் முறையீடு தாக்கல் செய்வதற்கான காலத்தை நீட்டித்திட வேண்டும். அதன்பின்னர்தான் குடிமக்கள் தேசியப் பதிவேடு இறுதிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட வேண்டும். இந்தியர் எவரொருவரும் விடுபடக்கூடாது.

   வரைவு குடிமக்கள் தேசியப் பதிவேட்டில் விடுபட்ட 40 லட்சம் மக்களும் ‘சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தவர்கள்’ என்று பாஜகவின் தலைவர் கூறியிருப்பதானது விரிவான அளவில் ஐயறவினை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தப் பிரச்சனை தொடர்பாக மக்கள்  அமைதியையும், பொறுமையையும் கடைப்பிடிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக்கொள்கிறது. நாட்டின் நாட்டு மக்களின்  ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அரித்து வீழ்த்திட மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.