மதுரை:
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி புதனன்று ஆஜராக சென்னை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் நடப்பது ஜனநாயக ஆட்சியா… இல்லை போலீஸ் ஆட்சியா.., எனவும் நீதிபதிகள் கடும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளராக பொறுப்பு வகிப்பவர் வழக்கறிஞர் ஹரிராகவன். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக இவர் மீது 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், ஹரிராகவன் கடந்த வாரம் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சத்தியபாமா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது அமர்வில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜரானார். அவர் வாதிடுகையில், ‘‘துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளில் மனுதாரரின் கணவருக்கு ஜூலை 24-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த உத்தரவு நகல் ஜூலை 26-ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் 6.10 மணிக்கு மனுதாரரின் கணவர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்’’ என்றார். தொடர்ந்து ஹரிராகவனின் ஜாமீன் உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது.

போலீசாரின் நடவடிக்கை மீது அதிருப்தி அடைந்த நீதிபதிகள், நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், மனுதாரரின் கணவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது எப்படி எனக் கேள்வி எழுப்பினர்.

நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், வேன்டுமென்றே அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா… இல்லை போலீஸ் ஆட்சியா… என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி புதனன்று காலை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: