சென்னை,
மோட்டார் வாகனச்சட்ட திருத்தத்தை வாபஸ் வாங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 7ல் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சி.ஐ.டியு) அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திங்களன்று (ஜூலை 30) சம்மேளத் தலைவர் ஏ.குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநிலப் பொதுச் செயலாளர் எம்.சிவாஜி கூறியதாவது: இந்திய மோட்டார் தொழிலையே கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய பாஜக அரசு, பொறுப்பேற்ற காலம் முதல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அரசின் முயற்சிகளை தொழிலாளர்கள் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் முறியடித்து வருகிறார்கள். கடந்த வாரம் கூட மாநிலங்களவையில் சட்டத் திருத்தம் முன் மொழியப்பட்டது. பாஜக தவிர, பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் கூட இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்துள்ளனர் என்றால் இந்த சட்டத் திருத்தத்தின் ஆபத்தை எளிதில் உணர முடியும். தமிழகத்தை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் எம்.பி. உட்பட, அ.தி.மு.க. தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் இம்மசோதாவிற்கு எதிரான குரல் கொடுத்து தடுத்துள்ளனர். இந்த நிலையில் இக்கூட்டத் தொடர் முடிவதற்குள் மீண்டும் மோட்டார் வாகனச் சட்ட திருத் தத்தை நிறைவேற்ற பாஜக அரசு துடிக்கிறது. இச்சூழலில் தான் இச்சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று அனைத்து மோட்டார் வாகனச் சங்கங்களும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்து அறிவித்துள்ளன.

இந்த சட்டத் திருத்தத்தால் பாதிக்கப்படும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், இரு சக்கர, மூன்று, நான்கு சக்கர பழுது நீக்குவோர்கள் வேன், டாக்சி, லாரி, ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் கள், ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்திருப்பவர்கள் என சகலரும் ஈடுபடும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டோ தொழிலாளர்களை திரட்டி பங்கேற்பது என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 7ஆம் தேதியன்று ஆட்டோக்கள் இயங்காது. தொழிலாளர் உரிமை மற்றும் மாநில உரிமைக்காக நடைபெறும் இப்போராட்டத்தில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்களும் பங் கேற்பதோடு, பொது மக்கள் பேராதரவு தர வேண்டுமென தமிழ்நாடு ஆடடோ தொழிலாளர் சம்மேளம் (சி.ஐ.டி.யு.) சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.