திருப்பூர்,
இந்தியாவின் மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள பல லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை படுகுழிக்குள் தள்ளும் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை மத்திய மோடி அரசு கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக திருப்பூரில் 1500 தொழிலாளர்களைத் திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

திருப்பூர் சிஐடியு மாவட்ட தலைமை அலுவலகத்தில் சிஐடியு மோட்டார் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஒய்.அன்பு தலைமையில் அனைத்து மோட்டார் தொழிலாளர் சங்க நிர்வாகிகளின் கூட்டுக்கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் என்.சேகர், ஏஐடியுசி மோட்டார் சங்க நிர்வாகி சுரேஷ், ஐஎன்டியுசி தலைவர் அ.பெருமாள், செயலாளர் சிவசாமி, எம்எல்எப் சார்பில் மு.சம்பத், பாண்டியராஜன், எச்எம்எஸ் செயலாளர் முத்துசாமி, இருசக்கர வாகன பழுதுநீக்குநர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் செந்தில், ரத்தினகுமார், இருசக்கர வாகன பழுதுநீக்குநர் நலச்சங்க தலைவர் எஸ்.பி.ராஜ், சையது அக்பர், வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஆர்.அன்பழகன், விஜயகுமார், திருப்பூர் மாவட்ட மோட்டார் பழுதுநீக்குவோர் நலச் சங்கத்தைச் சேர்ந்த கே.சாமிநாதன் உள்பட அனைத்து சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள மோடடார் வாகன சட்டத் திருத்தம் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரத்தைப் படுமோசமாக பாதிக்கும். எனவே இந்த சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், நெடுஞ்சாலை சுங்க வசூலைக் கைவிட வேண்டும். இன்சூரன்ஸ் என்ற பெயரில் கொள்ளையடிப்பதைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி வரும் 7ஆம் தேதி அரசுப் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி, லாரி, சிறிய ரக சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுகின்றன. அத்துடன் கார், இருசக்கர வாகன பழுது நீக்கும் ஒர்க்ஷாப்கள் அனைத்தையும் அடைத்து போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது என்று நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறும் நிலையில், திருப்பூரில் சாலைப் போக்குவரத்து துறையைச் சேர்ந்த 1500 பேரைத் திரட்டி திருப்பூர் குமரன் சிலை முன்பாக சாலை மறியல் போராட்டத்தை நடத்துவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.