===வெண்புறா===                                                                                                                                 

எட்டுவழிச் சாலையடா
அரச அரக்கக் கொலையடா
நட்டுவச்ச பயிரரையல்ல
உயிரப் புடுங்கும் திட்டமடா
வயல்கள் ஊர்கள் மலைகள
தாரு பூதம் நெருங்குது – எங்க
நிலத்தின் உரிமை பறிபோயி
வாழ்வும் கனவும் நொறுங்குது
(எட்டுவழி)

பயிர்வளர்க்க படும் பாட்டை
சொல்லியழுதா தீராது – எங்க
வெள்ளாமையில் வேட்டுவச்ச
துரோகத் தழும்பு மாறாது
நான்குவழிச் சாலையின்னு
புடுங்கியது போதாதா – இப்ப
எவனுக்காக புடுங்க இந்த
எட்டுவழிச் சாலைத் திட்டமடா
(எட்டுவழி)

கல்வராயன் ஜருகு மலைகள்
உங்க கண்ண உறுத்துதா – ஒரு
வண்டிப் பாத கூட எமக்கு
சொந்தமாக இருக்குதா
கொழுத்தவனும் வலுத்தவனும்
சுரண்டுவது நோக்கமா – உங்க
எட்டு வழிச்சால ஏழ எங்க
கோவணத்துக்கும் ஆகுமா
(எட்டுவழி)

கையகல நிலத்தில் தான்டா
குடியிருப்பு கெடக்குது
ஓதம் விழுந்த கொட்டாயில்- எங்க
குடித்தனங்கள் நடக்குது
கார்ப்பரேட்டு கவுருமெண்டு
கள்ளக்கூட்டு சிரிக்குது – எங்க
நிலத்த புடுங்க விடமாட்டோம்
கண்ணில் ரத்தம் தெரிக்குது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@       

====ஏகாதசி==== 

            1
எத்தனையோ சனங்களுக்கு
இல்லையடா இருக்க வீடு
மரங்கள வெட்டி என்ன
மசுருக்குடா இந்த ரோடு
போடணுமா எட்டுவழிச் சால – அந்தப்
பாடையில யாரக்கொண்டு போக…
                  2
ஒட்டுத்துணி உடுத்த இல்ல
ஒத்த வேளச் சோறுமில்ல
இத்தக் குடிச பிச்சு
எறிஞ்சிகளே எட்டத்திலே
போடணுமா எட்டுவழிச் சால – அந்தப்
பாடையில யாரக்கொண்டு போக…
                   3
காடழிச்சு குளம் மூடி
கட்டடங்கள் செஞ்சுவச்ச
கூடழிச்சு குருவி ஓட
எந்திரத்தக் கொண்டுவச்ச
போடணுமா எட்டுவழிச் சால – அந்தப்
பாடையில யாரக்கொண்டு போக…
                4
வெளஞ்ச பயிரு பச்ச
வெடுக்குன்னுதான் புடுங்குறியே
உழுது வெதச்சவன
ஊரவிட்டுத் தொரத்துறியே
போடணுமா எட்டுவழிச் சால – அந்தப்
பாடையில யாரக்கொண்டு போக…
                  5
அவசர ஒதுங்களுக்கு
கக்கூசுந்தான் இல்லையடா
செத்தபொணம் தூக்கிப்போக
இல்லையிங்கு பாதையடா
போடணுமா எட்டுவழிச் சால –அந்தப்
பாடையில யாரக்கொண்டு போக…
                  6
கம்பு சோளமெல்லாம்
கதிர் கதிரா வெளஞ்ச மண்ண
காரோட்டி நசுக்கணுமா
கவர்மெண்டே கூறுமய்யா
போடணுமா எட்டுவழிச் சால – அந்தப்
பாடையில யாரக்கொண்டு போக…
                   7
ஆடுகுட்டி மேஞ்ச காடு
அண்ணன்மாரு உழுத காடு
செத்துநாங்க போறோமய்யா
பொணத்துமேல போடு ரோடு
போடணுமா எட்டுவழிச் சால – அந்தப்
பாடையில யாரக்கொண்டு போக…
                8
நாத்துக்கு ஒரு பாட்டு
நாங்கபாடி வச்ச மண்ணில்
கூத்துக்கு ரோடு போட
கோமாளிக வந்தீகளே
போடணுமா எட்டுவழிச் சால – அந்தப்
பாடையில யாரக்கொண்டு போக…
                  9
பூவு பிஞ்செல்லாம்
பொறந்து வரும் பூமியெத்தான்
காவு கேக்குறியே
கருணை இல்லா கவர்மெண்டே
போடணுமா எட்டுவழிச்சாலை – அந்தப்
பாடையில யாரக்கொண்டு போக
                 10
ஆட்டுச் சாணங்கள
அடி உரமா போட்ட மண்ணு
ஆத்தா கைரேக
அங்கமெல்லாம் படிஞ்ச மண்ணு
போடணுமா எட்டுவழிச் சால – அந்தப்
பாடையில யாரக்கொண்டு போக…
                11
நரம்புல ரத்த மெடுத்து
நகப்பாலீஸ் போடணுமா?
சேனதொட்டு வச்ச மண்ண
சிமிண்ட்டால மூடணுமா?
போடணுமா எட்டுவழிச் சால – அந்தப்
பாடையில யாரக்கொண்டு போக…
              12
ஏரோடு திரிஞ்சோமே
எங்களோட நெலத்துக்குள்ள
தாரோடு போட்டு எங்கள
தள்ளிட்டீக கெணத்துக்குள்ள
போடணுமா எட்டுவழிச் சால – அந்தப்
பாடையில யாரக்கொண்டு போக…
@@@@@@@@@@@@@@@@@@@

===ந.காவியன்===                                                                                                                                                                                                                                                                                                                                    நடப்பாய் வாழி, செம்படையே!
(பல்லவி)

என் நிலம் இதுவே! என் நிலம் இதுவே!
என் உரிமை – இது – என் உரிமை!
மண்வளம் எல்லாம் மக்களின் உழைப்பு!
மக்களின் உரிமையைக் காப்பதெம் பொறுப்பு!
(அநுபல்லவி)

நடந்து வருகிறோம்! நடந்து வருகிறோம்!
நடப்பாய் வாழி, செம்படையே!
நிலத்தை மீட்கவே, உரிமை காக்கவே,
நிறைவாய் வெல்க செம்படையே!
(சரணங்கள்)

அப்பனும் பாட்டனும் ஆத்தா பாட்டியும்
அல்லும் பகலுமாய் உழைத்த நிலமிது
எப்படி நாங்கள் முகவரி இழப்போம்?
எடப்பாடி அரசே! பதில் சொல்! பதில் சொல்!
(என் நிலம் இதுவே…)

நிலத்துக்கு லட்சங்கள் கொடுத்திட்ட போதும்,
நிலத்தை வேறெங்கும் வாங்க முடியுமா?
வீட்டுக்குப் பெருந்தொகை அளித்திட்ட போதும்,
வீடின்றி நாங்கள் வீதியில் நிற்பதோ?
(என் நிலம் இதுவே…)

திட்டங்கள் தீட்டித் தூத்துக்குடியிலே
தீயவர் சுட்டனர்; தீரர்கள் மடிந்தனர்!
‘நீட்டு’த் தேர்வினால் எங்கள் மாணவர்
நிறைந்த கல்வியை இழந்து மாய்கிறார்!
(என் நிலம் இதுவே…)

எண்வழிச் சாலை என்பது எல்லாம்
ஏய்க்கும் முதலாளி வர்க்கம் கொழுக்கவே!
கண்களை வாங்கிச் சித்திரம் கொடுக்கும்
கயமைத் திட்டத்தைக் கைவிடு! கைவிடு!
-(என் நிலம் இதுவே…)

போராடு! போராடு! நாங்கள் வருகிறோம்!
புறப்படு! புறப்படு ! மாற்றங்கள் காண்போம்!
ஏரோடும் நிலங்களில் காரோடப் பாதையா?
இருளோட மார்க்சீய ஒளியுண்டு வா, வா!
(என் நிலம் இதுவே….)

Leave A Reply

%d bloggers like this: