கோவை,
மதுவில் விஷம் கலந்து பெயிண்டரைக் கொலை செய்த இளைஞருக்கு செவ்வாயன்று கோவை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நாகபட்டிணம் மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் என்.பிரகாஷ் (23), இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் முன் கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அதே அடுக்குமாடி குடியிருப்பில் சுள்ளிமடையைச் சேர்ந்த பி.மகேஸ்வரி (45) என்பவரும் வீட்டு வேலை செய்து வந்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை மகேஸ்வரியின் கணவர் பெயிண்டர் புகழேந்தி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், புகழேந்தியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதன்படி 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி புகழேந்தியைதான் வேலை செய்து வரும் அடுக்குமாடி குடியிருப்புப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மதுவில் விஷம் கலந்து கொடுத்து புகழேந்தியைக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவமானது அப்போது மர்ம விலங்கு கடித்ததால் அவர் உயிரிழந்ததாகவும் தகவல் பரவியது. இதுகுறித்து விசாரணை நடத்திய சிங்காநல்லூர் காவல் துறையினர் பிரகாஷ், மகேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கானது கோவை 3-ஆவது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சி.சஞ்சய்பாபா செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், பிரகாஷின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்புகூடுதல் வழக்கறிஞர் இ.ஆர்.சிவகுமார் ஆஜராகினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.