தில்லி,

பெண்கள் மற்றும் சிறுமியர்க்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கு மட்டும் நாடு முழுவதும் 1,023 விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று, மோடி அரசுக்கு மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. குறிப்பாக, பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில், சின்னஞ்சிறுமிகள் கூட வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.இச்சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதைத் தடுக்க, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்று அண்மையில் கொண்டுவரப்பட்டது.

மேலும், இந்த வழக்குகளை விசாரிப்பதற்கென சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டு, அதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய சட்ட அமைச்சகம் தற்போது அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘பாலியல் வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் 1,023 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்; இதற்கு ரூ. 767 கோடியே 25 லட்சம் செலவாகும்; இதில் மத்திய அரசு தனது பங்காக ரூ. 464 கோடி வழங்க வேண்டியதிருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.