புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆறாம் வகுப்புக்கான தமிழ்ப்பாட நூலை முழுமையாக வாசித்தேன். பாடப்புத்தகங்கள் தயாரிக்கும்போது கூடுதலான கவனமும், அக்கறையும் தேவை என்று படுகிறது. கடந்த காலங்களைக் காட்டிலும் பாடங்களின் தேர்விலும், அவற்றை முன்வைக்கும் முறையிலும் இணையதளங்களை பயன்படுத்துவதற்கான உந்துதலை ஏற்படுத்துவதிலும் மிகப்பெரிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆனால், சொற்களைத் தேர்வு செய்வதிலும், சில இடங்களில் அறிவியலுக்குப் புறம்பான அல்லது உண்மைக்கு மாறான அம்சங்கள் இருப்பதும், கூடுதல் கவனத்தோடு இதைக் கையாண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

பக்கம் 8-ல் “மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு மொழி” என்று இருக்கிறது. முதலாவதாக, கண்டறிந்த கண்டுபிடிப்பு என்கிற இரண்டு வார்த்தைகளும் 6 வார்த்தைகள் கொண்ட ஒரு வாக்கியத்திற்குள் ஒன்று அடுத்து வருவது படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.

இரண்டாவதாக, கண்டுபிடிப்பு என்பது மறைந்திருக்கும் ஒன்றை அல்லது காணாது இருக்கும் ஒன்றை கண்டுபிடிப்பது. மொழியைப் பொருத்தமட்டில் ஒரு மொழி இருந்து அதை திடீரென்று ஒருவர் கண்டுபிடித்து விடவில்லை. மாறாக, சைகை அதை அடுத்து ஒலி, பிறகு ஒலிகளை ஒழுங்குபடுத்துதல், பிறகு வார்த்தைகள் என்று அது பலகட்டங்களை தாண்டி வந்திருக்கிறது. அது ஒரு பரிணாம வளர்ச்சி. அதை கண்டுபிடிப்பென்றும், கண்டறிந்தது என்று சொல்வதும் பொருளுக்கு ஏற்ற வார்தை பயன்பாடு அல்ல.

அதே பக்கத்தின் அடுத்த பத்தியில் “ உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கிய வளம் பெற்றுத்திகழும் மொழிகள் மிகச்சிலதே. அவற்றுள் செம்மைமிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்ப்டடவை சில மொழிகளே” என்ற வாக்கியங்கள் உள்ளன.உலக மொழிகளில் இலக்கண, இலக்கிய வளம் பெற்றத்திகழும் மொழிகள் மிகச்சிலதே என்று சொல்வதே மிகவும் பொருத்தமானது. பலவற்றுள் என்கிற கூடுதல் சேர்க்கை என்ன நோக்கத்திற்காக வந்தது என்று தெரியவில்லை.

இதேபோன்று பக்கம் 9-ல் திணைகள் குறித்தான பகுதியில் “உயர்திணைக்கு எதிர்ச்சொல் தாழ்திணை என்றுதான் இருந்திருக்க வேண்டும். மாறாக, அல்+திணை அஃறிணை. அதாவது உயர்வு அல்லாத திணை என்று நம் முன்னோர்கள் பெயரிட்டிருக்கின்றனர் என்றும் இதன் காரணமாகவே இனிப்பு அல்லாத காய் எனப் பொருள்படும் பாகு + அல் + காய் = பாகற்காய் என பெயரிட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதுபோன்ற விளக்கங்கள் இயல்பானதா? அல்லது மூல ஆசிரியர்கள் கருதாத ஒன்றை உரையாசிரியர்கள் எழுதுவது போன்றதா என்று புரியவில்லை.ஏனெனில் பின்னொரு இடத்தில் (பக்கம் 11) “வரி வடிவ எழுத்துக்கள் அறிவியல் தொழில்நுட்ப நோக்கில் உருவாக்கப்பட்டவையாக உள்ளன” என்று கூறப்பட்டிருக்கிறது.

எழுத்துக்ளை உருவாக்கிய போது தட்டச்சு எந்திரம் வரும், கணினிகள் வரும், கைபேசிகள் வரும் என்றெல்லாம் முன் யோசனையோடு நமது முன்னோர்கள் இந்த வரிவடிவத்தை தீர்மானித்திருக்க மாட்டார்கள். குழந்தைகளிடம் நமது பெருமையை பேசும்போது அது நேர்மையான கருத்தாக இருக்க வேண்டும். அதிகப்பட்சமாக தமிழின் வரிவடிவ எழுத்துக்கள் அறிவியல் தொழில்நுட்ப நோக்கிலும், பயன்படுத்தத்தக்கதாக உள்ளன என்று குறிப்பிட்டிருக்கலாம். அதைத் தாண்டிய எதுவும் இல்லாத ஒன்றை ஏற்றிச் சொல்வது என்று கருதத்தோன்றும்.

இதைப்போன்று பக்கம் 10-ல் வளர்மொழி என்கிற தலைப்பில் முதல் பத்தியில் முத்தமிழின் வகைகளை கூறி அவற்றின் பயன்பாடு பற்றி குறிப்பிடுகிற போது “நாடகத்தமிழ் உணர்வில் கலந்து வாழ்வை நல்வழிப்படுத்தும்” என்று வரையறை செய்யபபட்டிருக்கிறது. இது சில நாடகங்களை மனதில் கொண்டு பொதுவாக நாடகம் அனைத்துமே வாழ்வை நல்வழிப்படுத்துபவை என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும். இது பகுத்துணர்ந்து செயல்படுவதற்கு பதிலாக தன்மொழியின் அனைத்தும் பெருமைமிக்கது என்கிற குருட்டு நம்பிக்கைக்கு இட்டுச் செல்லும்.

பக்கம் 16-ல் முற்கால இலக்கியங்களில் இடம் பெற்றள்ள அறுவை மருத்துவம் பற்றிய செய்திகள் வியப்பளிப்பதாக உள்ளது. அறுவை மருத்துவம் என்பது உடலின் ஏதோ ஒருபகுதியை அறுத்து சிகிச்சை செய்து தைப்பது. ஆனால், போர்க்களத்தில் புண்பட்ட ஒரு வீரரின் காயத்தையோ சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணையோ ஊசியால் தைப்பது அறுவை மருத்துவம் என்று சொல்வது இல்லாத பண்பு ஒன்றை ஏற்றிச் சொல்லும் தற்புகழ்ச்சிஅன்றி வேறொன்றாக இருக்க வாய்ப்பில்லை.

பக்கம் 34ல் பறவை இனங்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை என்கிற ஒரு தலைப்பு இருக்கிறது. ஆனால் பறவை இனங்கள் ஏன் காப்பாற்றப்பட வேண்டும் என்பது குறித்தான எந்த விளக்கமும் இந்த பாடத்தில் இல்லை. தேவையை வலியுறுத்தாமல் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தை எப்படி உருவாக்க முடியும்.

பக்கம் 8-ல் “மூத்த தமிழ் மொழி என்றும் இளமையானது என்று ஒரு அறிக்கை போன்று உள்ளது. மூத்த மொழி எப்படி இளமையானதாக இருக்க முடியும் என்கிற கேள்வி 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தவிர்க்கவே முடியாமல் எழக்கூடும். எனவே, இளமையானது என்று சொல்வதற்கான காரணத்தை ஒரு வாக்கியத்திலாவது அந்த இடத்தில் சொல்லியிருக்க வேண்டும்.
டாக்டர் போன்ற ஆங்கில வார்த்தைகளை அப்படியே உள்வாங்கி பயன்படுத்துவ என்று முடிவு செய்தால் தவறில்லை.

இல்லையெனில் பக்கம் 90ல் டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் போன்றவற்றில் மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும். பக்கம் 100ல் ஆசாரக்கோவையை மேற்கோள் காட்டி “பிறர் செய்யும் தீமைகளை பொறுத்துக்கொள்ளுதல்” பொறையுடைமை என்பதற்கான விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

பாதகம் செய்பவரை மோதி மிதிக்க வேண்டும் , தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும் என்பதை சொல்வதற்கு பதிலாக தீமைகளை பொறுத்துக்கொள்ளுதல் என்று சொல்வது முற்றிலும் தவறானது. தவறுகளை பொறுத்துக் கொள்வது என்பதும், தீமைகளை பொறுத்துக் கொள்வது என்பதும் வெவ்வேறானது. இன்னும் சொல்லப்போனால், பொறையுடைமை என்கிற வார்த்தைக்கு பொறுத்தமற்ற விளக்கம் என்று தோன்றுகிறது.

தாலாட்டு என்பதற்கு தால்+ஆட்டு , அதாவது நாவை அசைத்து பாடுவதால் தாலாட்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாவை அசைக்காமல் எந்த பாட்டையும் பாட முடியாது, எனவே தாலாட்டுக்கு மட்டும் அப்படி ஒரு சிறப்பு இருப்பது போன்றும் இதர பாடல்களை நாவசைக்காமல் பாட முடியும் என்பது போன்றும் சொல்வது நிச்சயமாக சரியான கருத்துக்களாக இருக்க முடியாது.

பக்கம் 105ல் “இயற்கையை கடவுளாக வணங்குதல் தமிழர் மரபு” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இயற்கையை வணங்குவதும், இயற்கையை கடவுளாக வணங்குவதும் வெவ்வேறானது. இங்கு இயற்கையை வணங்குவதை இயற்கையை கடவுளாக வணங்குவதாக சொல்லியிருப்பது முற்றிலும் பொறுத்தமற்றது.

பக்கம் 109-ல் “கலைகளும், இலக்கியங்களும் ஒரு நாட்டின் பண்பட்ட நாகரிகத்தை உலகிற்கு உணர்த்துவன” என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் மிகவும் பொதுவான முற்றிலும் திசை திருப்புவதற்கு வாய்ப்பிருக்கிற வரையறை. கலைகளும், இலக்கியங்களும் அவை தோன்றிய காலத்தின் அனைத்து நாகரிகங்களையும் வெளிப்படுத்துபவை. அவற்றில் பண்பட்ட நாகரிகம் மட்டும் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு இலக்கிய படையிலும் நல்லது செய்வோர் தவறிழைப்போர், இயல்பானோர் என்று பல பாத்திரங்களிருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அதேபோன்று பொதுவான வரையறைப்புகளை செய்கிற போது தரவுகளின் அடிப்படையிலும், தரமான ஆய்வுகளின் அடிப்படையிலுமே முன்வைக்க வேண்டும். பக்கம் 110-ல் ம.தி.கயல் என்கிற பெண் “என் அம்மா பெயர் மங்கை, என் அப்பா பெயர் திருநாவுக்கரசு, அப்பெயர்களின் முதல் எழுத்துக்களை தலைப்பெழுத்துக்களாக வைத்துள்ளேன்” என்று கூறுவதாக உள்ளது. 5ம் வகுப்பு அல்லது 6-ம் வகுப்பு படிக்கும் எந்த ஒரு மாணவருக்கும் அம்மா,அப்பா பெயரை தலைப்பெபழுத்துக்களாக சேர்த்து வைக்க வேண்டும் என்று தோன்றுவதெல்லாம் அரிது. தலைப்பெழுத்துக்களாக வைத்துள்ளனர் என்பதே இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும். ஆனால் இத்தகைய ஒரு விசயத்தை அதாவது அம்மாவின் பெயரையும், தலைப்பெழுத்தாக அதிலும் முதல் தலைப்பெழுத்தாக வைத்திருப்பதாக சொல்வது பாராட்டத்தக்கது. ஆனாலும் அதிகமாக ஒன்றை முன்வைப்பது குழந்தைகளுக்கு தவறுகளை கற்றுக் கொடுப்பதாக மாறி விடும்.

பக்கம் 132-ல் வணிகம் குறித்தான பகுதியில் “ தனக்கு தேவையான சில பொருள்களை பிறரிடமிருந்து வாங்குவான், தன்னிடம் உள்ள பொருள்களில் சிலவற்றை பிறருக்கு தருவான்” என்று சொல்லப்படடிருக்கிறது. தருவான் என்பதன் பொருள் வணிகத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, வணிகத்தையும் உள்ளடக்கியது என்று வேண்டுமானால் சொல்லலாம். விற்பான் என்று சொல்வதுதான் சரியான பொருள் தருவதாக இருக்கும். விற்பவரை வணிகர் என்பது சரிதான். ஆனால், வாங்குபவர் அனைவரும் நுகர்வோர் அல்லர். இறுதியாக யார் அந்த பொருளை பயன்படுத்துகிறாரோ அவர்தான் நுகர்வோர். மற்றவர்கள் வணிகர்கள் என்றே அழைக்கப்படுவர். இங்கேயும் அந்த வார்த்தைகள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை.

இதேபோன்று “வணிகர்கள் அனைவரும் நேர்மையானவர்கள்”, “வாங்க நேரமில்லாதவர்களுக்கு இணையவழி வணிகம் உதவுகிறது” போன்றவை சரியான பொருள்தரத்தக்க முறையிலோ , அல்லது முழுமையான பொருள்தரும் முறையிலோ இல்லை என்பதை கவனத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட வேண்டும்.

“பணத்தைக் கொண்டு ஏதேனும் ஒரு தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்” என்பது போன்ற பொதுவான வழிகாட்டுதல்கள் சரியல்ல. அதேபோன்று தொழில்செய்து முன்னேறுவது மனிதனின் கடமை என்றெல்லாம கூறப்பட்டிருப்பது அந்த குறிப்பிட்ட கதையோடு பொருந்தி வருவது என்கிறபோதும் தவறான வரையறுப்பாகும். பக்கம் 143ல் “மனிதர்களுக்கு தேவையான எல்லா பொருட்களையும் கிடைக்கச் செய்வது வணிகத்தின் நோக்கம் ஆகும்” என்று சொல்லப்பட்டிருப்பது, எல்லா பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக யாரும் வணிகம் செய்வதில்லை. அப்படி செய்தால் அது சேவையாகும். வணிகம் என்பது ஒரு தொழில் என்கிற முறையில் தனக்கு லாபம் வரும் பொருட்களை விற்பது என்பதற்கு மேல் எதுவுமில்லை. பாரதியாரைப் பற்றி இவர் இந்திய நாட்டின் சொத்து என காந்தியடிகள் சொன்னதாக சொல்லப்படுகிறது. ஆனால் இதேபோன்று தோழர் ஜீவாவைப்பற்றி சொன்னதாக பல கட்டுரைகளில் படிக்கிற நேர்ந்திருக்கிறது. இதுபோன்ற அம்சங்களை ஒருவருடைய புகழை உயர்த்துவதற்கோ, போற்றுவதற்கோ மற்றொருவர் மேல் ஏற்றிச் சொல்வது நியாயமற்றது.

வயல்காட்டில் வேலை செய்யும் உழவர்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்திருப்பார்கள். எத்தனை வசதி படைத்த விவசாயியாக இருந்தாலும் வயல் வேலை செய்து கொண்டிருக்கும்போது சட்டை அணிந்து கொண்டும், வேஷ்டி அணிந்து கொண்டும் வேலை செய்ய மாட்டார்கள். பொதுவாக மனிதர்கள் மேலாடையின்றியும், உரிய ஆடைகளின்றியும் இருப்பதைக் கண்ணுற்ற காந்தியடிகள் மேல்சட்டை அணிவதை தவிர்த்தார் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். மாறாக, வயலில் உழுது கொண்டிருந்த விவசாயிகளை பார்த்துவிட்டு ஆடையில்லாததால் அவர்கள் இப்படி இருக்கிறார்கள். எனவே, தானும் இப்படி இருக்க முனைந்ததாக சொல்வது எவ்வித தர்க்கத்திற்கும் பொருந்தாத கூற்றாகும்.

பக்கம் 166ல் “நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை” என்பதும் அதேபோன்று கவிஞர்கள் அனைவருமே வாழ்வின் பொருளை உணர்த்தும் உயர்ந்த சிந்தனைகளை கூறியுள்ளனர்.(பக்கம் 168)- என்பதும் சாற்றுதல்கள் சரியல்ல. ஒரு உரையாடலில் (பக்கம் 170, 171) “தீவதிலகை: பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது ” என்பதன் அடுத்த அடி இப்படி தொடர்கிறது “மணிமேகலை: ஓ, அப்படியா? வடிவத்திற்கு ஏற்ற பெயராக இருக்கிறது”. இது கூறுவது கூறல் வார்த்தை விரயம், உரையாடலின் போக்கை தடைபடுத்தும்.
அரசால் கொடுக்கப்படும் பட்டம் கவுரவம் போன்றவற்றைப்பற்றி குறிப்பிடும்போது பட்டம் பெற்றார் என்று கூறுவது சரியானதே. ஆனால் கவிமணி என்னும் பட்டம் பெற்றவர் என்று சொல்லும்போது அது ஏற்கெனவே இருக்கிற ஒரு பட்டம், இதற்கு முன்பும் ஒருசிலருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது போன்ற மயக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

இதுபோன்ற கவனக்குறைவுகள் தவிர்க்கப்பட்டால் இந்த பாடநூல் இன்னும் செழுமையடையும். சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துவார்களா?.

-க.கனகராஜ்

Leave A Reply

%d bloggers like this: