மகாபாரத கதையில் பாண்டவர்கள் தங்களுக்கு உரிமையான நாட்டை கேட்பார்கள். ஆனால், கௌரவர்களோ, நாட்டை தர மறுத்ததுடன், ஊசி நடும் அளவு கூட, நிலம் தர முடியாது என்று ஆணவத்துடன் கூறுவார்கள். எனவே, பாண்டவர்கள் தாங்கள் பறிகொடுத்த நிலங்களை மீண்டும் பெறுவதற்கு, குருக்ஷேத்திர போரில் ஈடுபடவேண்டியதாகியது.

தற்போது, நவீன மகாபாரதமாக, பாரத்மாலா திட்டத்தில், சென்னை முதல் சேலம் வரை சுமார் 7500 ஏக்கர் நிலங்களை, விவசாயிகளிடமிருந்து பறித்து, கெளரவர் களின் தலைவன் மோடி, சகுனி எடப்பாடியை சேர்த்துக் கொண்டு, 8 வழி பசுமை சாலை அமைக்க உள்ளனர். தங்களுடைய வாழ்வையும் நிலத்தையும் அழித்து, பசுமை சாலை போட வேண்டுமா? என விவசாயிகள் கேட்டால், வளர்ச்சி, வளர்ச்சி என முழக்கமிடுகின்றனர், எடப்பாடியும் மோடியும். இந்தியா முழுவதும், கடந்த 10 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சாகுபடி செய்த விளைபொருளுக்கு விலை கிடைக்காமல், சாகுபடி பொருட்களை சாலையில் கொட்டி, விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். தமிழகத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ. 2 ஆயிரம் கோடியை, கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்காமல், பாக்கி வைத்துள்ளது. 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, ஐந்து லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.  வளர்ச்சி என்பது விவசாயிகளுக்காக இல்லை. நான், அம்பானிக்கும் அதானிக்கும் வளர்ச்சி ஏற்படும் விதமாக அவர்களின் பின்னால் நிற்பேன் என்று, உத்தரப்பிரதேசத்தில் பேசியுள்ளார் பிரதமர் மோடி. எனவே, தற்போது நடைபெறும் நவீன மகாபாரதத்தில், விவசாயிகளின் நிலத்தை பறித்து, கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் கெளரவ மோடி, சகுனி எடப்பாடியை அதிகாரத்தில் இருந்து அகற்ற, பூமி காக்கும் போரை நடத்த வேண்டும்.

அதற்காக, மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம், ஆகஸ்டு 1 ஆம் தேதி திருவண்ணாமலை நகரத்தில் துவங்கி, ஆகஸ்ட் 7 ஆம் தேதி சேலத்தில் நிறைவடைய உள்ளது. என் நிலம், என் உரிமை என்ற முழக்கத்துடன் இணைந்திடுவோம், விவசாயிகளை பாதுகாத்திடுவோம்.

Leave a Reply

You must be logged in to post a comment.