தீக்கதிர்

திரிபுராவில் லெனின், தசரத்தேவ் வரிசையில் வைத்தியநாத் மஜூம்தார் சிலையும் தகர்ப்பு: மாநிலம் முழுவதும் இடதுமுன்னணி போராட்டம்…!

அகர்தலா;
திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரத்தின் பக்கபலத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் நடத்தி வருகிறது.
மோசடியான வாக்குறுதிகள் மூலம் ஆட்சியைப் பிடித்த பாஜக, முறைப்படி அரியiணையில் உட்காருவதற்கு முன்னதாகவே தலைநகர் அகர்தலாவில் நிறுவப்பட்டிருந்த லெனினின் முழுஉருவச் சிலையை புல்டோசர் மூலம் இடித்துத் தகர்த்தது. இது நாடு முழுவதும் அப்போது அதிர்வலையை ஏற்படுத்தியது.

எனினும் வெறிபிடித்த பாஜக கும்பல், டாக்டர் அம்பேத்கர், திரிபுரா முன்னாள் முதல்வர் தசரத் தேவ், முன்னாள் அமைச்சர் பிமன் சின்ஹா ஆகியோரின் சிலைகளை அடுத்தடுத்து உடைத்தனர். தற்போது ஜூலை 30 அன்று இடதுசாரி அரசில் துணைமுதல்வராக இருந்தவரும், மக்கள் தலைவருமான வைத்தியநாத் மஜூம்தாரின் முழுஉருவச் சிலையையும் உடைத்துச் சிதைத்துள்ளனர்.

மஜூம்தாரின் சொந்த ஊரான கைலாஷ்கர் நகரிலேயே இந்த வன்முறை நடந்துள்ளது. தகர்க்கப்பட்ட சிலையை பாஜக குண்டர்கள் அருகில் உள்ள ஆற்றில் தள்ளியுள்ளனர்.
வைத்தியநாத் மஜூம்தார், 1940 முதல் திரிபுரா மக்கள் இயக்கங்களின் போராட்ட நாயகனாக இருந்தவர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், இடதுமுன்னணியின் அமைப்பாளர் ஆகிய நிலைகளிலும் நீண்ட காலம் செயல்பட்ட சிறப்புக்குரியவர்.

இதையடுத்து, மஜூம்தாரின் சிலை தகர்ப்பைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திரிபுரா முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்றன. குற்றவாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி கைலாஸ்கர் காவல் நிலையம் முன்பும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.