மதுரை,
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை ஒவ்வொரு மாவட்ட நீதிபதிகளும், நேரில் சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையில், திருச்செந்தூர் கோவிலில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உரிய அடிப்படை வசதிகள் இருக்கிறதா? என அந்தந்த மாவட்ட நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும்.

புராதனப் பொருட்கள் பாதுகாப்பு, கோவில் கட்டுமானங்கள், கட்டண வசூல், சாமி தரிசனம் செய்வதில் பாகுபாடு இருக்கிறதா? என்பன குறித்தும் ஆய்வு செய்து செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருச்செந்தூர் கோவிலில் தேவையற்ற பூஜைகள் மற்றும் ஹோமங்களைத் தடுக்க கோவில் நிர்வாகத்துடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.