====செந்தாமரைக் கண்ணன்===
தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக நெல் உற்பத்தியில் புகழ்பெற்ற மாவட்டமாக திருவண்ணாமலை விளங்குகிறது. இங்கு உற்பத்தியாகும் அரிசி, தமிழகத்தில் மட்டுமின்றி, வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும், விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தினசரி 1,500 டன் முதல் 2,200 டன் வரை அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில் நேரடியாக மற்றும் மறைமுகமாக 10000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் செங்கம், காஞ்சி, கடலாடி பகுதிகளில் பூ உற்பத்தி செய்யப்பட்டு தினசரி பெங்களூரு மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு செல்கிறது.

இதேபோல், இம்மாவட்டத்தில் கணிசமான அளவு பால் உற்பத்தி செய்யப்படுகிறது. செங்கம் அடுத்த அம்மாபாளையத்தில் 2 லட்சம் லிட்டர் பாலை, பால் பவுடராக உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது. மாவட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் இயங்கி வருகின்றன. தினமும் 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இதில் 80 சதவீதம் சென்னைக்குச் செல்கிறது.

உலகின் பழமையான மலைப்பகுதி
திருவண்ணாமலையின் தொன்மை குறித்து, தஞ்சாவூர் நிலத்தடி நீர் ஆய்வாளர் கே.சிவசுப்பிரமணியன், “உலகிலேயே பழமையான மலைப்பகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது” என்கிறார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் 330 அடிக்கு கீழ்தான் ஈரப்பதம் உள்ளது. இருந்தாலும், ஆயிரம் அடிக்கு கீழ் விவசாய சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை அமைந்துள்ளது. எனவே, இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் இந்த மாவட்டத்திற்கு உள்ளது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேடியப்பன், கவுத்தி மலைகளில் உள்ள இரும்பு தாதுவை கார்ப்பரேட் கம்பெனியான ஜிண்டால் நிறுவனம் வெட்டியெடுக்க முயன்றது. அப்போது இப்பகுதி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் திரண்டு அதை தடுத்து நிறுத்தினர்.
தற்போது, அதே நிறுவனம் உருவத்தை மாற்றிக்கொண்டு 8 வழிச் சாலை என்ற போர்வையில் அந்த மலைகளை அபகரிக்க முயற்சிக்கிறது. எனவேதான் இந்த சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பம் குடும்பமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கத்தை அடுத்த மேல்வணக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி சேகர், தன்னுடைய நிலம், வீடு, கிணறு அனைத்தும் பறிபோகும் துயரத்தை தாங்கமுடியாமல், பூச்சி மருந்து குடித்து உயிரிழந்தார்.

தருமபுரி
காவிரி மற்றும் தென்பென்னை நதிகள் தமிழகத்திற்கு வரும் நுழைவாயிலாக தருமபுரி மாவட்டம் திகழ்கிறது. 70 சதத்திற்கும் மேற்பட்ட மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நெல், இஞ்சி, காலிபிளவர், மொச்சை, பருத்தி, சூரியகாந்தி, ஆமணக்கு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சாமந்தி, கேந்தி உள்ளிட்ட பூ நாற்றுகளை இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதி விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். தற்போது அமையவுள்ள பசுமைச்சாலை திட்டம் தங்களின் வாழ்வையும், விவசாயத்தையும் அழிக்க உள்ளதாக கூறி இருளப்பட்டி, சின்னகவுண்டாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

வரலாற்றுப் புகழ்பெற்ற எயில்நாடு
பண்டைக் காலத்தில் எயில் நாடு என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிக அளவிலான மங்கனி உற்பத்தி செய்யப்படுகிறது. ருமானி, அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி உட்பட பலவகையான மாம்பழங்கள் விளைகிறது. ஒரு ஆண்டில் 300 ஆயிரம் டன் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ஓசூர் பகுதியில் பசுமைக் குடில் அமைத்து ரோஜா மலர் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் நெல், கேழ்வரகு, தேங்காய்,புளி உள்ளிட்ட பொருட்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

இத்தகைய வளங்கள் மிக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 வழிச் சாலை அமைப்பதற்காக ஊத்தங்கரை ஒன்றியம் சிங்காரப் பேட்டை அருகே அத்திப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயக் குடும்பத்தினரை போலீசார் கைது செய்த அவலம் நடைபெற்றது.
இயற்கை சுரங்கமான “சாலிய சேரமண்டலம்”

சாலிய சேரமண்டலம் என செப்பேடுகளில் குறிப்பிடப்படும் சேலம் மாவட்டம், இயற்கை தாதுக்களின் சுரங்கமாக திகழ்ந்து வருகிறது. மல்கோவா மாம்பழ விளைச்சலுக்கு பெயர்பெற்ற சேலம் மாவட்டத்தில், ஜவ்வரிசி, பருத்தி, பாக்கு, காபி, வெற்றிலை, மரவள்ளிகிழங்கு உள்ளிட்ட பயிர்களும் விளைவிக்கப்படுகிறது.

சேர்வராயன் மலை, நாம மலை, ஊத்து மலை, கஞ்ச மலை, தீர்த்த மலை, கபில மலை உள்ளிட்ட மலைகள் இந்த மாவட்டத்திற்கு வளம் சேர்க்கின்றன. காவிரி, வெள்ளாறு, திருமணிமுத்தாறு, வசிஷ்டநதி மற்றும் மேட்டூர் அணை கால்வாய்கள் மூலம், 28 ஆயிரத்து, 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மத்திய அரசின் கெயில், தனியாருக்கு சொந்தமான டால்மியா, தமிழக அரசும் இணைந்து மாக்னைட் சுரங்கமும் அமைத்துள்ளது. கஞ்சமலையில் 45 கோடி டன் எடையுள்ள இரும்புதாது உள்ளதாகவும், சேர்வராயன் மலையில் அலுமினியம் தயாரிக்க பாக்சைட் அதிக அளவில் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இயற்கை சுரங்கமாக விளங்கிவரும், மஞ்சவாடி, அடிமலைப்புதூர், செட்டியார் காடு, ஆச்சாங்குட்டப்பட்டி, வலசையூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் நிலம் அளவீடு செய்யப்பட்ட போது, ஆச்சாங்குட்டப்பட்டி விவசாயி உண்ணாமலை என்பவர், தனது விவசாய நிலத்தில் படுத்து புரண்டு கதறி அழுதார். என்னைக் கொன்று விட்டு நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்ற அவரின் கதறல், இன்றும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

காஞ்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கிவரும் கார் தொழிற்சாலைகளும், மின்னணு சாதனங்கள், உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், அதிக அளவில் உருவாகியுள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. ஆயினும் நெல், நவதானியம் சாகுபடி மட்டுமின்றி, பட்டு நெசவு தொழிலில் சிறந்து விளங்கிவருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட பட்டுச் சேலைகள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டிடக் கலையின் தொன்மை நாகரிகம் வாய்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், 8 வழிச் சாலைக்காக, திருப்பெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வட்டாரங்களில், தாம்பரத்தை அடுத்த கரசங்கால் பகுதியில் தொடங்கி ஒரத்தூர், நாட்டரசன்பட்டு, வடக்குப்பட்டு, ஆப்பூர், குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர் உள்ளிட்ட கிராமங்களில் 59 கிலோமீட்டர் நிலங்கள் பாதிக்கப்பட உள்ளது.

நடைபயணம்
இத்தகைய பின்னணியில்தான் எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், “என் நிலம் – என் உரிமை” என்ற கொள்ளை முழக்கத்துடன் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளையும் விவசாயத் தொழிலையும் காக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரைக்கும் இன்று முதல் (ஆகஸ்ட்1) பிரச்சார நடைபயணம் தொடங்குகிறது.

திருவண்ணாமலை அண்ணா சிலையிலிருந்து மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் பிரச்சார நடைபயணம் புறப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் துவங்கி காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக 170 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சேலத்தில் நிறைவு பெறுகிறது. எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கின்றனர். அந்த அந்த மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வழிநெடுங்கிலும் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.