மதுரை,

இது ஜனநாயக ஆட்சியா அல்லது போலீஸ் சர்வாதிகார ஆட்சியா என மதுரை உயர் நீதிமன்றம் தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறது.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஊர்வலம் சென்ற போது காவல்துறை கலவரத்தை ஏற்படுததி 13 பேரை சுட்டுக் கொன்றது. இந்த  கலவரத்தை தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் மற்றும் வழக்குறிஞர் ஹரிராகவன் ஆகியோர் மீது தூத்துக்குடி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதன், ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே, நீதிமன்றத்தில் சரணடைந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய நிர்வாகி வழக்குறிஞர் ஹரிராகவன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக ஹரிராகவன் மீது 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24-ம் தேதி ஜாமீன் பெற்ற நிலையில் 26-ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் காவல்துறை ஹரிராகவனை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தது.

இதையடுத்து வழக்கறிஞர் ஹரிராகவனின் மனைவி சத்தியபாமா காவல்துறை உள்நோக்கத்தோடு தனது கணவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்திருந்தார். இந்த முறையீட்டின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷிர் அகமது ஆகியோர் தமிழக அரசை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

ஏற்கனவே ஹரிராகவன் வழக்கில் ஜாமீன் வழங்கியிருக்கும் நிலையில் ஏன் மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.  தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? போலீஸ சர்வாதிகார ஆட்சியா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும்  இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: