திருப்பூர்,
திருப்பூர் ஆயத்தஆடை தொழிலுக்குத் தேவையான பாலிதீன்பைகளை உற்பத்தி செய்வதையும், சப்ளை செய்வதையும் தடைவிதிக்க வேண்டாம் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமிக்கு அவர் செவ்வாயன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு 2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. பிளாஸ்டிக் தடை விதிப்பு என்பதில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பின்னலாடைசரக்குகளை அனுப்பும் பாலிதீன்பைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது பின்னலாடை உற்பத்தித் துறை மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சரக்குகளை பேக் செய்து அனுப்ப மாற்று ஏற்பாடு இல்லாததால் ஒட்டுமொத்தமாக இந்த தொழில் ஸ்தம்பித்து நிற்கும் நிலை ஏற்படும். இதன் சார்பு தொழில்களும் அடுத்தடுத்து பாதிப்பைச் சந்திக்கும். மேலும் இத்தொழிலில் ஒவ்வொரு பின்னலாடை சரக்கையும் பார்சல் செய்வதற்கு பயன்படுத்தும் பாலிதீன் பைகள் மறுசுழற்சி தொழில்நுட்பத்தில் மீண்டும் பயன்படுத்தத் தக்கவையாகும். உலகில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ள நாடுகளில் கூட இந்த பாலிதீன் பைகளை பார்சல் செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். இங்கிருந்து பின்னலாடைகளை வாங்கும் வர்த்தகர்களும் 20 மைக்ரான், 25 மைக்ரான் பாலிதீன்களை பயன்படுத்தும்படி குறிப்பிட்டுக் கொடுக்கின்றனர். எனவே வெளிநாட்டு இறக்குமதியாளர்களின் குறிப்புகளின்படிதான் பாலிதீன் பைகளை பயன்படுத்தும் நிலை உள்ளது. முழுக்க, இறக்குமதியாளர்களின் சந்தை சார்ந்து இயங்கும் நிலையில் அவர்களது நிபந்தனைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே இந்த தொழிலின் தனித்த தேவையை கவனத்தில் கொண்டு திருப்பூர் பின்னலாடை தொழிலுக்கு பாலிதீன் பைகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு பிளாஸ்டிக் தடையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஏற்றுமதி தொழில் இடையூறு இல்லாமல் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்றும் ராஜா எம்.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.