தூத்துக்குடி;
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தியே. அரசின் முடிவில் மாற்றம் இல்லை என ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.

இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, தமிழக அரசின் நடவடிக்கையால் மூடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவின்படி மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்திகள். இதில், தமிழக அரசின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை.

இதுபோன்ற வதந்திகளும் செய்திகளும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஆலை மூடப்பட்டதால் வேலை வாய்ப்புகளை இழந்த மக்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு அளிப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட புதிய இணையதளத்தின் மூலமாக இதுவரை சுமார் 400 பேர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 95 சதவீத இரசாயன பொருட்கள்   வெளியேற்றப்பட்டுள்ளன. இதனை முழுமையாக அகற்றும் பணி மேலும் 30 நாட்கள் நீடிக்கும் என தெரிகிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர் அனைத்து பகுதிகளுக்கும் சீல் வைக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: