விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட இராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருசங்கு. இவரது மகன் கோபியும் வள்ளியம்மாளும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சுவேதா (10), மேகநாதன் (7) இரு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக கோபி வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூன் 13 ஆம் தேதிதான் வீடுதிரும்பினார். பின்னர் அவர், தனது சகோதரி சிவகாமி, கலா ஆகியோர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் பிறகு வீட்டிற்கே வரவில்லை எனக் கூறப்படுகிறது.  கோபிக்கு, சகோதரியின் மகளை இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்போவதாக கூறப்படுகிறது. இது குறித்து வள்ளியம்மாள் கடந்த ஜூலை 8ஆம் தேதி விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த வள்ளியம்மாள் திங்களன்று (ஜூலை 30) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு கொடுக்க வந்தார். அப்போது, அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது இரு குழந்தைகள் மீதும் தன் மீதும் ஊற்றிக்கொண்டு தீக் குளிக்க முயன்றார். அதைப் பார்த்த பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்துநிறுத்தி காப்பாற்றினர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.