தீக்கதிர்

மூலிகை கொசுவத்திச் சுருள்: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிமுகம்

வேலூர்,
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில், ‘டெங்கு கொசுக்கள் வளர்ச்சியின் அச்சுறுத்தலை சமாளிக்க’ என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கு, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

கருத்தரங்குக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் தலைமை வகித்து, மூலிகை கொசுவத்திச் சுருளைஅறிமுகம் செய்து வைத்துப் பேசியதாவது:- திருவள்ளுவர் பல்கலைக்கழக உயிரிதொழில் நுட்பவியல் துறையும், ஐரோப்பிய நாட்டின் டீசைட் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, உயிரி தொழில்நுட்பவியல் துறை மூலம் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். அதன் பயனாக உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொசுக்களையும், அதன் மூலம் வேகமாக பரவிவரும் டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மண்ணுக்கும், மக்களுக்கும் பயன்தரும் வகையில், 100 சதவீதம் இயற்கை மூலிகைகளைக் கொண்டு பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கூடத்தில் மூலிகை கொசு வத்திச் சுருள் தயாரித்து சாதனைசெய்துள்ளனர்.  இந்த மூலிகை கொசுவத்திச் சுருள் வணிக ரீதியில் தயாரித்து சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு ஆராய்ச்சிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி கட்டணத்துக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.கருத்தரங்கில் ஐரோப்பிய நாட்டின் டீசைட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பட்டணத்து ரஹ்மான் உயிரிதொழில்நுட்ப வியல் துறை ஆராய்ச்சிகள் குறித்துப் பேசினார். முன்னதாக பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வெ.பெருவழுதி வரவேற்றார். உயிரி தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் எர்னஸ்ட் டேவிட், உயிரியல் துறை இணைப் பேராசிரியர் ஜி.சிங்காரவேலு ஆகியோர் முன்னிலைவகித்தனர். இதில், வாணியம்பாடி யுனானி மருத்துவர்கள் எஸ்.அக்பர் கவுசர், யாசர் அராபத் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உயிரி தொழில்நுட்பவி யல் துறைஉதவி பேராசிரியர் அ.ராஜசேகர் நன்றி கூறினார்.