திருவள்ளூர்,
வடசென்னை அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 30 ஆம் தேதி காலை 6 மணிமுதல் 48 மணிநேர வேலை நிறுத்தப்போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் அலகு 1 ல் 630-மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இதில் 800 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.அலகு 2 ல் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 500 தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்களாகவே பணி செய்து வருகின்றனர்.இதில் பெண்களும் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர் களை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இந்நிலையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்யவேண்டும், மின்சார வாரிய அதிகாரி கையொப்பமிட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வழங்க வேண்டும், தினக்கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும், இபிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்து இபிஎப்-எண்ணை தொழிலாளி பெயரிலேயே வழங்க வேண்டும்,பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், ஒவ்வொரு மாதமும் 7ஆம் தேதிக்குள் ஊதியத்தை வழங்கவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது.

இதையடுத்து வடசென்னை அனல் மின் நிலையம் நுழைவுவாயில் முன்பு குவிந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முழக்கமிட்டு வருகின்றனர். தொடர்ந்து 48மணிநேரம் போராட்டம் நடைபெறுவதால் தொழிலாளர்கள் அங்கேயே சமைத்து சாப்பிடுகின்றனர். இந்த போராட் டத்திற்கு வடசென்னை அனல் மின் நிலைய சிஐடியு கிளைத் தலைவர் கே.வெங்கட் டையா தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ். எஸ். சுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன், மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் டி.ஜெயசங்கர், கே.ரவிச் சந்திரன், வடக்கு மண்டல செயலாளர் ஆர்.ரவிக்குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன், மாவட்ட துணை நிர்வாகிகள் ஜி.விநாயகமூர்த்தி, எஸ். செல்வராஜ், இ.ஜெயவேலு, எஸ். சுந்தரம், கே.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி அனல் மின் நிலையம், மேட்டூர் அனல் மின் நிலையம் ஆகியவற்றில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.கோரிக்கைகளை உடனடியாக பேசி தீர்க்கவில்லையென்றால் அடுத்து போராட்டங்கள் தீவிரமாகும் என்று தலைவர்கள் எச்சரித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.