சேலம்,
சேலம் முதல் சென்னை வரையிலான எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறும் என் நிலம் என் உரிமை நடைபயண பிரச்சார இயக்கத்திற்கு ஆதரவளிப்பது என சேலத்தில் நடைபெற்ற பசுமை வழிச்சாலையை எதிர்க்கும் அமைப்புகள்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டம் திங்களன்று சேலம் சிறைதியாகிகள் நினைவகத்தில் நடைபெற்றது. சேலம் – சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கும் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் அகில இந்திய விவசாய மகாசபையின் மாநில குழு உறுப்பினர் மோகனசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து ஆகஸ்ட் 1ம் தேதி திருவண்ணாமலை முதல் சேலம் வரை நடைபெறும் என் நிலம் என் உரிமை நடைபயணத்திற்கு ஆதரவளித்து வரவேற்பளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதேபோல், அகில இந்திய விவசாய மகா சபை சார்பில் 5ம் தேதி கடலூரில் இருந்து வரும்வேன் பிரச்சாரத்திற்கு சேலம் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் வரவேற்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமாகா மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேல், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, நிர்வாகி பூபதி, விவசாய மகா சபை மாவட்டச் செயலாளர் அய்யந்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.