ஈரோடு,
ஈரோடு ஒன்டிக்காரன் பாளையம் பகுதியில் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டி இருந்து பெரிய சேமூர் செல்லும் வழியில் ஒன்டிக்காரன் பாளையம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஸ்டார் பிளாஸ்டிக் என்ற தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் உபயோகமற்ற பழைய பிளாஸ்டிக் பொருட்களை உடைத்தும், எரித்தும் பழைய பிளாஸ்டிக் கழிவிலிருந்து புதிய பிளாஸ்டிக் பொருட்களை தயார் செய்து வருகிறார்கள். இரவு நேரங்களில் தொழிற்சாலையிலிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும்போது, இப்பகுதி முழுவதும் காற்று மாசுபடுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற சுவாச நோய்கள் ஏற்படுகிறது. வாந்தி, மயக்கம் போன்றவைகளும் ஏற்படுகிறது. இதேபோல், தொழிற்சாலை கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதில்லை. மாறாக, ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து கழிவுநீர் அதனுள் விடப்படுகிறது. அவ்வாறு செய்து வருவதால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் முற்றிலுமாக மாசுஅடைந்து உபயோகப்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது.

இதுபற்றி தொழிற்சாலை நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுத்து நச்சு கலந்த நீரையும், காற்று மாசுபடுவதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி சிந்தனை செல்வன் தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.