ஸ்ரீநகர்;
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாஜக-வுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்தியது, ஒரு கோப்பை விஷம் குடித்ததைப் போலிருந்தது என அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில் 2014-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பாஜக-வுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸூக்கு 12 இடங்களும் கிடைத்தன.இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டு சிறிது காலம் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றது. பின்னர் நேரெதிர் கொள்கைகளை கொண்ட மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜக-வும் இணைந்து, சந்தர்ப்பவாத நிலையெடுத்து கூட்டணி ஆட்சி அமைத்தன. எனினும் அடிக்கடி இக்கட்சிகள் முட்டிக்கொண்டன. இறுதியாக, கடந்த மாதம் பிடிபி-க்கு அளித்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றதால், ஆட்சி கவிழ்ந்தது. தற்போது ஜம்மு – காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் பிடிபி கட்சியின் ஆண்டுவிழாவையொட்டி, நிகழ்ச்சியொன்றில் மெகபூபா முப்தி பேசியிருப்பதாவது:
                      காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதையடுத்தே பாஜக-வுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி முன் வந்தது. இருப்பினும் அது மிக மோசமான அனுபவத்தையே கொடுத்தது. மாநிலத்தின் நலனுக்கான எந்த ஒரு திட்டத்தையும் பாஜக செய்ய விடவில்லை. மாநிலத்தில் அமைதியை திரும்பச் செய்யும் முயற்சிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை. ஒரு கோப்பை விஷத்தை அருந்தியது போலவே கூட்டணி அரசு இருந்தது. பாகிஸ்தானுடனான நல்லுறவு, காஷ்மீருக்கு சிறப்பு பொருளாதார திட்டம் என நான் கேட்ட எதையும் பிரதமர் மோடி ஏற்கவில்லை. பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ளது. திறந்த மனதுடன், காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க அவர் யோசனை தெரிவித்துள்ளார். அதை ஏற்று மத்திய அரசு காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க முன் வர வேண்டும்.இவ்வாறு மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: