தூத்துக்குடி;
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்குமாறு பசுமைத்தீர்ப்பாயத்தில் அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவி்ட்டு, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சலையால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். மே மாதம் 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஆலையை நிரந்தரமாக மூட பசுமைத்தீர்ப்பாயமும் தமிழக அரசும் உத்தரவிட்டன. மீண்டும் ஆலையை திறக்க அனுமதிக்குமாறு ஸ்டெர்லைட் சார்பில் தில்லியில் உள்ள பசுமைத்தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் இந்த வழக்கில் எதிர் மனுதாரர் தரப்பில் இணைக்க மனு செய்திருந்தனர். அதையடுத்து அர்ச்சுனன் எதிர்த்தரப்பு மனுதாரதாக இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் தரப்பில், ஆலைக்குள்ளிருந்து ஆசிட் உள்ளிட்ட பொருட்களை வெளியே எடுக்க தங்களுக்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது நிர்வாகத்தின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்கும், கே.எஸ்.அர்ச்சுனனுக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.அர்ச்சுனனுக்காக வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன், சுப்பு முத்துராமலிங்கம், ஜெனோ பென்சிகர் ஆகியோர் ஆஜராகினர்

Leave A Reply

%d bloggers like this: