கோவை,
நுகர்வோர் மன்றத்தில் இருப்பதாக கூறிக்கொண்டு அன்னூர் பகுதியில் சிலர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் திங்களன்று மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர் ஹரிகரன் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்து தங்களின் குறைளை மனுக்களாக அளித்தனர். இதில் கோவை மோப்பிரிபாளையத்தை அடுத்த வாகாரயம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் நுகர்வோர் மன்றத்தில் நிர்வாகியாக இருப்பதாக கூறிக்கொண்டு சிலர்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளிடம் மிரட்டி பணம் பறிக்கின்றனர்.  மேலும், அரசு அதிகாரிகள் அனைவரும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் எனவே என்னிடம் பணம் கொடுங்கள் நான் வேலையை முடித்து தருகிறேன். இல்லையென்றால் வேலை நடக்காமல் பார்த்துக் கொள்வேன் என்றும் மிரட்டுகின்றனர். இவர்கள் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செயல்படாத நலவாரியம்:
ஏஐடியுசி கட்டுமான தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், கோவை மாவட்டத்தில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பணி பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதேநேரத்தில் இத்தொழிலாளர்களுக்கான நலவாரியமோ செயல்படாத நிலையில் உள்ளது. ஆகவே கட்டுமான தொழிலாளர்களுக்கு நலவாரியத்தில் விண்ணப்பிக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஈமச்சடங்கு உதவி தொகையை அடக்கம் செய்வதற்கு முன்பு வழங்க வேண்டும். 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு நிபந்தனை இன்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

வெறிச்சோடிய ஆட்சியர் அலுவலகம்:
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது குறைகளை மனுவாக அளித்து வருகின்றனர். இந்நிலையில் திங்களன்று நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்களின் வருகை என்பது மிக குறைவாகவே காணப்பட்டது. இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.