திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை, விசைத்தறி ஜவுளி உள்ளிட்ட தொழில்களும், விவசாயமும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை தமிழக அரசு தன்னிச்சையாக உயர்த்தியிருப்பது அநீதியானது. எனவே இம்மாவட்ட மக்களின் வாழ்க்கை நெருக்கடியைக் கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட சொத்து வரியைக் குறைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் தியாகி பழனிசாமி நிலையத்தில் திங்களன்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழக அரசு நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சிகளில் சொத்து வரியை தானடித்த மூப்பாக உயர்த்தி அறிவித்துள்ளது. இதனால் திருப்பூர் மாநகராட்சி மற்றும் இந்த மாவட்டத்தில் உள்ள உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கயம், வெள்ளக்கோவில் நகராட்சிகளிலும் சொத்து வரியை 50 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ள சம்பந்தப்பட்ட உள்ளாட்சி தனி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாநகராட்சியான திருப்பூரில் பிரதானமாக இருக்கும் பின்னலாடைத் தொழில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி, டிராபேக் குறைப்பு, நூல் விலை உயர்வு என அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களால் நிலைகுலைந்து தள்ளாடி வருகிறது. தமிழக அரசே சட்டசபையில் ஒப்புக் கொண்டபடி ஏராளமான தொழிற்சாலைகள் நலிவடைந்து மூடப்படும் நிலையிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழந்தும், வருமானம் சுருங்கியும் கடும் நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் மாநகராட்சியில் வழக்கமாக வழங்க வேண்டிய அன்றாட குடிநீர் விநியோகம், குப்பை அகற்றம், தெரு விளக்கு, சாலை, வடிகால் வசதிகளை நிறைவேற்றுவதில் மெத்தனப் போக்கு நிலவுகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தராமலேயே சொத்து வரியை 50 சதவிகிதம் உயர்த்தி மக்கள் தலையில் திணிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், இதுபோன்ற கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஜனநாயகக் கடமையாகும். ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளாமல், தனி அதிகாரிகள் மூலம் சொத்து வரியை குறுக்கு வழியில் திணிக்கும் நடவடிக்கையை ஏற்க முடியாது. அத்துடன் உள்ளாட்சிக்கு ஒதுக்க வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை எக்காரணத்தைக் கொண்டும் தடுத்து நிறுத்துவதையும் ஒப்புக் கொள்ள முடியாது. எனவே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதுடன், உடனடியாக உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு உரிய நிதியை வழங்கி கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகள் தொய்வின்றி நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது உயர்த்தியுள்ள சொத்து வரியைக் குறைக்க தமிழக அரசும், திருப்பூர் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளின் தனி அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இந்த கோரிக்கைகள் குறித்து வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்களையும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. சொத்து வரியைக் குறைக்க வலியுறுத்தியும், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது, உள்ளாட்சி நிதியை வழங்குவது ஆகிய கோரிக்கைகளை மையமாக வைத்து மாவட்டத்தில் 200 மையங்களில் தெருமுனைப் பிரச்சார இயக்கம் நடத்தி மக்களிடம் கொண்டு செல்வது என்றும், அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 27ஆம் தேதி மாவட்ட தலைநகரமான திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.