சென்னை

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது மத்திய தொலை தொடர்பு அமைச்சராக இருந்தவர் தயாநிதிமாறன். இவர் தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக தொலைபேசி இணைப்பு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிவேக 700 இணைப்புகளை போட்கிளப் பகுதியில் அமைந்துள்ள கலாநிதி மாறன் இல்லம் பகுதியிலும், கோபாலபுரம் பகுதியிலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டது. இதனால், அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதுகுறித்த வழக்கை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வந்தது. அந்த வழக்கில் தயாநிதி மாறனை விடுவித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சிபிஐ தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தயாநிதிமாறனை விடுவித்தது செல்லாது. தயாநிதிமாறன் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். மீண்டும் வழக்கை விசாரித்து ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தயாநிதிமாறன் உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று முறையீடு செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ரஞ்சன் கோகாய், ஆர். பாணுமதி, நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை. தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணையைத் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரும் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி தயாநிதிமாறனின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: