கோவை,
அரசு மருத்துவமனைகளுக்கு தாய்பாலை தானமாக அளிப்பது குறித்த விழிப்புணர்வு சந்திப்பு கோவையில் நடைபெற்றது.
ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை தாய்பால் வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோயமுத்தூர் பெற்றோர் அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் சார்பில் திங்களன்று கோவையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் அமைப்பின் அறங்காவலர் பிரியா கார்த்திக், மினு ஞானமூர்த்தி மற்றும் தாய்ப்பால் வழங்குதல் ஆலோசகர் ஸ்வாதி ஜெகதீஸ் ஆகியோர் கூறுகையில், தாய்ப்பால் கொடுப்பது குறித்த தவறான மூட நம்பிக்கையைக் களையவும், தாய்பால் குறித்து இளம் தாய்மார்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் அமைப்பின் நோக்கம். மேலும் தற்போது உயிர்த்துளி என்ற பெயரில் தாய்பால் தானம் செய்து வருகிறோம். குழந்தை பிறந்த முதல் நாளில் இருந்து இரண்டு ஆண்டுகள் வரை தாய்பால் கொடுப்பதால் அக்குழந்தை நல்ல எதிர்ப்பு சக்தி உடன் வளரும்.
தாய்மார்கள் அளிக்கும் பால், கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு உடல் நலம் குன்றிய குழந்தைகள், பிறப்பிலேயே எடை குறைந்த குழந்தைகள், தாய்மார்கள் விட்டுச் சென்ற குழந்தைகள் ஆகியோருக்கு அளிக்கப்படுகிறது. இதுவரை கோவையில் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் இதன்மூலம் பயன்பெற்றுள்ளனர். தாய்ப்பாலை அளிப்பதற்கு பிரத்யேகமான கருவிகளும், பாலை சேமித்து, பதப்படுத்தி வைக்க சிறப்பு பைகளும் இலவசமாகவே அளிக்கப்படுகிறது. மேலும் வீட்டிற்கே வந்து தாய்பாலை பெற்று மருத்துவமனையில் சேர்க்க தன்னார்வர்களும் உள்ளனர். ஆகவே, தாய்மார்கள் தாய்பாலை தானமாக வழங்க முன்வரவேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.