நாமக்கல்,
சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என கூட்டுறவு ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. கூட்டுறவு ஊழியர் சங்க (சிஐடியு) நாமக்கல் மாவட்ட 9 ஆவது மாநாடு ஞாயிறன்று சிஐடியு நாமக்கல் மாவட்ட குழு அலுவலகத்தில் கௌரவ தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் எம் ரங்கசாமி அறிக்கையை சமர்ப்பித்து பேசினார். மாநில இணைச் செயலாளர் ஏ.சண்முகம் சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சம வேலைக்கு, சம ஊதியம் என்ற அடிப்படையில் கூட்டுறவு நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு, நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு இணையான ஊதியம், போனஸ், சேதாரக் கழிவு மற்றும் இதர அடங்கிய புதிய ஊதிய ஒப்பந்தம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை நாமக்கல் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையாக மாற்றம் செய்திட வேண்டும். பதவி உயர்வு வழங்க முடியாத பணியாளர்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள பயிக் கொடையை உடனடியாக வழங்க வேண்டும் அரசு விடுமுறை நாட்களில் அனைத்துநியாயவிலைக் கடைகளுக்கும் விடுமுறை அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்டத் தலைவராக பி.ராமசாமி, பொதுச்செயலாளராக எம்.ரங்கசாமி, பொருளாளர் சுப்பரமணி, துணை தலைவராக மணிகண்டன், இணைச் செயலாளராக சுப்பிரமணியம் உட்பட 11 பேர்கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. முடிவில், சிஐடியுநாமக்கல் மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி நிறைவுரை ஆற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.