திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று நடைபெற்றது.

புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் அளித்த மனு: திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம் நெய்க்காரன்பாளையம் கோல்டான் பால் பண்ணை அருகில் புதிதாக டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது. இந்தப்பகுதியில் மிக அருகில் குடியிருப்புகளும், அரசு பள்ளிக்கூடமும் உள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் கடை திறந்தால் பெண்களுக்கும், பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் மிகுந்த இடையூரு ஏற்படும். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடை அமையவிருப்பதை தடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை சார்பில் அளித்த மனு: திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம் திருமலைகவுண்டன்பாளையம் சேர்ந்தவர் பாப்பாள். இவர், அரசு உயர்நிலைப்பள்ளிகளில் சமையலராக பணியாற்றி வந்தார். இதையடுத்து, அவரது சாதியை காரணம் காட்டி சமையல் செய்யக்கூடாது என மிரட்டப்பட்டு, முன்பு சமையலராக இருந்த பள்ளிக்கே மாற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்து கடந்த 18ம் தேதி புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்திற்கு விசாரணை அதிகாரியாக இருக்கும் அவினாசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் நடுநிலை இல்லாமல் செயல்பட்டு வருகிறார்.

எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக விசாரணை அதிகாரியை மாற்றி நேர்மையான அதிகாரியை நியமிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டனர்.ஏஐடியூசி தெரு வியாபாரத் தொழிலாளர் இணையம் சார்பில் அளித்த மனு: திருப்பூர் பல்லடம் என்.ஜி.ஆர் சாலையோராத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருபதுக்கும் மேற்பட்டோர் சிறு முதலீட்டில் பொருள்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஏஐடியூசி சங்கம் சார்பில் பலமுறை மனு கொடுத்து அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாலையோராத்தில் வியாபாரம் செய்யக்கூடாது என பல்லடம் நகராட்சி ஆய்வாளர் ஆட்களோடு வந்து விரட்டியுள்ளார். இதனால், வியாபாரிகள் 10 நாட்களாக தொழில் செய்ய முடியாமல் பெரும் வாழ்க்கை நெருக்கடியில் இருந்து வருகிறார்கள். எனவே, அவர்களுக்கு, அதே இடத்தில் மீண்டும் வியாபாரம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

திருப்பூர் தெற்கு அவிநாசிபாளையம் பொதுமக்கள் அளித்த மனு: இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். தற்போது இப்பகுதியில் உள்ள கிணறு, ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவுள்ளோம்.இதனால் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியத் தேவைக்காக தண்ணீருக்கு தினந்தோறும் அலைய வேண்டி உள்ளது. இதனால் குடிநீருக்கு மாதந்தோறும் பெரும் தொகை செலவாகி வருகிறது.  மேலும், 100 வீடுகளுக்கு மின்சார வசதி இல்லை. தெருவிளக்கு உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. எனவே, இதுகுறித்து கிராமத்தில் ஆய்வு செய்து உடனடியாக அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தனர். திருப்பூர், கொங்கு மெயின் ரோடு அம்பேத்கர் காலனி பகுதியில் வசிக்கும் செல்வி அளித்த மனு: எனது மகள் கவிதா கடந்த ஆண்டு வீட்டில் தனியாக இருந்த நிலையில், மூடி வைத்திருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மூவர் மீது வடக்கு
காவல் துறையில் புகார் அளித்திருந்தேன்.

ஆனால், இதுவரை காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை. மேலும், கணவரும் இல்லாமல் ஆதரவற்று வாழ்ந்து வரும் சூழலில், எனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ண்டார். முதியோர் உதவித்தொகை கேட்டு மனு: திருப்பூர் அங்கேரிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த முதியோர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை கடந்த 10 மாதங்களாக வழங்கப்படவில்லை. இது தொடர்பாக வட்டாட்சியர் உட்பட அலுவலர்களிடம் 5 முறைக்கும் மேலாக மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை. வயது முதிர்ந்த காலத்தில் பிழைப்பதற்கு இந்த உதவித்தொகை பயன்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது பெரும் சிரமத்தில் அன்றாடம் வாழ்வை கழிக்க வேண்டிஉள்ளது. இவர்களின் குழந்தைகள் திருமணத்திற்கு பின்பு கைவிட்ட நிலையில், கணவரும் இல்லாத சூழலில் இந்த தொகையும் இல்லாமல் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிலுவையில் உள்ள உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும். மேலும், மாதந்தோறும் முதியோர் உதவித்தொகையை முறையாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.