தீக்கதிர்

குறைந்து வரும் புலிகளின் எண்ணிக்கை…!

திருநெல்வேலி:
நாடு முழுவதும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், புலிகளை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டுமென வனத்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
களக்காடு புலிகள் காப்பக வனத்துறை சார்பில், களக்காடு தலை அணையில் உலக புலிகள் தின விழா நடந்தது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி கணேசன் தலைமை தாங்கினார். வனசரகர்கள் களக்காடு புகழேந்தி, கோதையாறு பாலாஜி, சூழல் மேம்பாட்டு திட்ட வனவர் அப்துல்ரகுமான் பங்கேற்றனர்.

தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வனத்தை பற்றியும், வன விலங்குகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி கணேசன் பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “தற்போதைய சூழலில் சுற்றுச்சூழல் மிகவும் இன்றியமையாதது.

சுற்றுச்சூழல் கெட்டால் நமக்குத்தான் பாதிப்பு. மாணவர்கள் சுற்றுச்சூழலை தெரிந்து கொண்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நாடு முழுவதுமே புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது 2,626 புலிகள் மட்டுமே உள்ளன. எனவே, புலிகளை பாதுகாப்பது குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காகவே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். புலிகள் எண்ணிக்கை குறைய முக்கிய காரணமான வேட்டையாடுதலை தடுக்க வேண்டும்.

புலிகளை பாதுகாப்பது பொதுமக்களின் கடமை. புலிகளுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு புலிகளை பாதுகாக்க பொதுமக்கள் முன்வர வேண்டும். பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட்டால் புலிகள் கண்டிப்பாக பாதுகாக்கப்படும். எந்தளவிற்கு நாம் காட்டை பாதுகாக்கிறமோ, அந்தளவிற்கு நமக்கு நன்மை ஏற்படும்” என்றார். விழாவில் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, மீரானியா மேல்நிலைப்பள்ளி, இடையன்குளம் அமீர் ஜமால் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.