சென்னை,
சென்னை நியூ ஆவடி சாலை ஐசிஎப் தொழிற் சாலை அருகே எல்.எச்.பி. ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை விரிவுபடுத்தும் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை டாடா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

பீகார், ஒடிசா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார் கள். அந்த எல்.எச்.பி. தொழிற்சாலையின் அருகிலேயே 150 தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.இந்நிலையில், திங்கட் கிழமை காலையில் பீகாரைச் சேர்ந்த பீர்பல் (20), நிதீஷ் ஆகிய இருவரும் அங்கு குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது புதிதாக கட்டப் பட்ட குடிநீர் தொட்டி உடைந்து அவர்கள் மீது விழுந்ததில், இருவரும் படுகாயம் அடைந்தனர்.உடனடியாக அருகில் இருந்த சக தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பீர்பல் பலியானார். நிதீசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ஐசிஎப் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் பி.ராஜாராமன் கூறியதாவது:- இந்த தொழிற்சாலையை விரிவுபடுத்தும் பணியில் வடமாநில வாலிபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் முறையான பாதுகாப்பு வசதி இல்லாமல் தங்க வைக்கப்பட்டுள் ளனர். குடிநீர் தொட்டியின் சுவர் சரிந்து ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒப்பந்த தொழிலாளர்களை காண்ட்ராக்ட் நிறுவனம் அடிமை போல் நடத்துகிறது. இது அந்த நிறுவனத்தின் அலட்சியத்தாலும், ஐசிஎப் பாதுகாப்பு அதிகாரிகளின் அலட்சியத்தாலும் இந்த உயிரிழப்பு நடைபெற்றுள்ளது. எனவே அரசு, தொழிலாளர் துறையும் அந்த ஒப்பந்த நிறுவனத்தின் மீதும், ஐசிஎப் பாதுகாப்பு அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திய பிறகே அடுத்தகட்ட பணிகளை மேற் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.