நாமக்கல்,
பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு தொடர்பாக உரிமையாளர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்று தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சிஐடியு அறிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டாரத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கமும், விசைத்தறி உரிமையாளர் சங்கமும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் காலவதியானது. இதைத்தொடர்ந்து தற்போது உயர்ந்துள்ள விலைவாசிக்கு ஏற்ப விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவிகித கூலி உயர்வு வழங்க வேண்டும். மேலும், பணியிடங்களில் தூய்மையான குடிநீர், முதலுதவி பெட்டி மற்றும் அடையாள அட்டை, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்ட சலுகைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனுவும்வழங்கப்பட்டது.

ஆனால், இதுதொடர்பாக கடந்த 21 மாதங்களாக எவ்வித உடன்பாடும் காணப்படாததால் 30.07.2018 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகளுடன் மூன்று கட்டமாக விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அசோகன், மாவட்டப் பொருளாளர் மோகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் குமார் சண்முகம் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் தரப்பில் பி.எஸ் கந்தசாமி, பாலசுப்ரமணி, சண்முகம், நந்தகுமார், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. ஆகவே, 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், வருகின்ற நவம்பர் மாதத்தில் கூலி உயர்வு தொடர்பாக சுமூகமாக பேசி தீர்வு காண முன்வருவதாகவும் உரிமையாளர்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை ஏற்று பள்ளிபாளையம் வட்டாரத்தில் திங்கட்கிழமை முதல் நடக்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என சிஐடியு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.