சிதம்பரம்,
கர்நாடக பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், தென் மாவட்டங்களில் பெய்யும் மழையாலும் மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. (120 அடி, 93 டி.எம்.சி. நீர்) இதனைத் தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு கல்லணைக்கு வந்தது. பின்னர் கல்லணையில் வெளியேற்றப்பட்ட தண்ணீர் கடந்த 26 ஆம் தேதி இரவு கும்பகோணம் அருகே கீழணைக்கு வந்தது. அதிக நீர் வரத்து இருந்ததால் அடுத்த ஒரு மணி நேரத்தில் கீழணையில் முழு கொள்ளளவான 9 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு நலன் கருதி கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் முதலில் 5 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. பின்னர் 27 ஆம் தேதி 30, 35 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. அதன்பிறகு 29ஆம் தேதி நிலவரப்படி மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மீண்டும் 16 ஆயிரம் கன அடியாகவும், 30ஆம் தேதி 11 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் இரு கரையை தொட்டு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.

மேலும் வீராணம் ஏரிக்கு வடவாற்று வழியாக 2200 கனஅடி, வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்கால் வழியாக விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதே போன்று தண்ணீர் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தால் இன்னும் 4 நாட்களில் வீராணம் முழுகொள்ளவை எட்டிவிடும். ஜூலை 30ஆம் தேதி நிலவரப்படி வீராணம் 39.5 அடியை எட்டியுள்ளது. அதன் முழுகொள்ளவான 46.5 அடியில் 45 அடிவரை தண்ணீர் தேக்கிவைக்கப்படும். அதன் பின்னர் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட பிறகு சென்னை குடிநீருக்கு அனுப்பிவைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். கடந்த 26 ஆம் தேதி இரவு முதல் 30ஆம் தேதி வரை கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு 1700 மில்லியன் கனஅடியை தாண்டியுள்ளது. இது வீராணம் ஏரியின் முழு கொள்ளளவான 1465 மில்லியன் கன அடி அளவுக்கு அதிகமாக வெளியேறி கடலில் கலந்து உப்புநீராக மாறிவருகிறது.

மழைக் காலங்களில் பெய்யும் மழைநீர் மற்றும் காவிரியில் இருந்து வரும் தண்ணீரை தேக்கிவைக்க எந்த ஏற்பாடும் இல்லாததால் அப்படியே போய் கடலில் கலக்கிறது. இதனால் மழை பொய்வு இல்லாத நேரங்களில் இந்த பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.  எனவே டெல்டா பகுதியின் கடைமடையான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை அப்போது சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த கே.பாலகிருஷ்ணன் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் கொள்ளிடம் ஆறு வழியாக பல டிஎம்சி தண்ணீர் விணாக கடலில் கலக்கிறது. அப்படிகடலில் கலக்கும் நீரை சேமித்து வைக்க காட்டுமன்னார்கோயில் அடுத்த ஓமம்புலியூர் அருகே கடலூர்- நாகை மாவட்ட எல்லையான ஆதனூர்-குமாரமங்கலம் இடையே தடுப்பணை கட்டவேண்டும் என்று பேசினார்.

இதனை ஏற்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரூ 400 கோடியில் தடுப்பணை கட்டப்படும் என்று 4.8.2014 அன்று சட்டமன்ற விதி 110-ன் கீழ் அறிவித்தார். அதன் பின்னர் அவர் மறைவிற்கு பிறகு வந்த ஓபிஎஸ்,இபிஎஸ் ஆட்சிகள் இன்று வரை தடுப்பணை கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது. அரசு அறிவித்தவாறு தடுப்பணை கட்டியிருந்தால் இன்று தேக்கமுடியாமல் கடலுக்கு திறந்துவிடப்படும் காவிரி தாயின் பல டி.எம்.சி தண்ணீரை தேக்கிவைத்து மழை இல்லாத நேரங்களில் நாகை,கடலூர் மாவட்ட விவசாயத்திற்கும்,குடிநீருக்கும் பயன்படுத்தி இருக்கலாம் என்று அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் கூறுகிறார்கள்.  மேலும் தடுப்பணை கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசை கண்டித்தும் உடனே தடுப்பணை கட்ட வலியுறுத்தியும் காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள விவசாயிகள் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள முட்டம் பாலத்தில் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: