==எம்.பாலசுப்பிரமணியன், மதுரை===
எட்டுவழிச்சாலை அமைப்பதற்கான நோக்கம் குறித்துப் பேசும் போதெல்லாம் சேலம் – திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுத்திமலை – வேடியப்பன்மலையில் அமைந்துள்ள இரும்புத்தாது வளத்தை வெட்டியெடுக்கும் உரிமையை ஜிண்டால் என்கிற கார்ப்பரேட் கம்பெனிக்கு உரிமம் வழங்கியிருப்பதாகவும், இதனை வெட்டியெடுத்து சென்னைத் துறைமுகத்திற்கு விரைந்து எடுத்துச் செல்லவே எட்டுவழிச்சாலை அமைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.

இந்தக்குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் அரசோ இதனை மறுக்கவோ – நிராகரிக்கவோ இல்லை. அதே நேரத்தில் இந்த எட்டுவழிச்சாலை அமையும் பட்சத்தில் இந்தப்பகுதி முழுவதும் தொழில்வளர்ச்சி ஏற்படும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மழுப்பல் பேச்சையே பேசி வருகிறது.இந்தியா உற்பத்தி செய்யும் இரும்பில் 4.7 மில்லியன் டன்கள் மட்டுமே உலக சந்தையின் தேவையை நிறைவு செய்கிறது. இந்தியாவில் இந்திய இரும்பு எஃகு ஆணையத்தின் (செயில்) சேலம் உருக்காலை போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட மொத்தம் 12-க்கும் மேற்பட்ட தனியார் பெருநிறுவனங்கள் இரும்பு எஃகு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கார்ப்பரேட் நிறுவனமான டாடா ஸ்டீல் உலகிலேயே இரும்பு உற்பத்தியில் 10 ஆவது இடத்திலும், ஜேஎஸ்டபிள்யு என்கிற சஜ்ஜன் ஜிண்டால் நிறுவனம் 21வது இடத்திலும் சேலம் ஸ்டீல் பொதுத்துறை நிறுவனம் 23வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு எஃகுவில் பெரும்பகுதி, அதாவது 62 சதம் கட்டுமானம் போன்ற உள்கட்டமைப்பு தேவைக்காகவும், பொறியியல் மற்றும் கனரக வாகன கட்டுமான தேவைக்கு 22 சதமும், தானியங்கி இயந்திர தேவைகளுக்கு 10 சதமும், பேக்கேஜிங் தேவைகளுக்கு 3 சதமும், இதர வாகனப் பயன்பாட்டிற்கு 3 சதமும் பயன்படுத்தப்படுகிறது.
ஆக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இரும்பு எஃகில் 4.7. மில்லியன் டன் தவிர்த்து விட்டுப் பார்த்தால், மீதம் 95.3 சதம் உள்நாட்டுத் தேவைக்கே பயன்படுத்தப்படுகிறது.

அதிலும் அமெரிக்கா தற்போது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்திற்கு 25 சதம் வரை வரி விதித்திருப்பதால், உலகம் முழுவதும் இரும்பு எஃகு மற்றும் அலுமினிய உற்பத்தியில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களிடம் தேக்கமடைந்துள்ள இரும்பு மற்றும் அலுமினியப் பொருட்களை மிகக்குறைந்த விலைக்கு விற்றுத் தீர்க்க ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்ற அலைபாய்ந்து கொண்டுள்ளன.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான வர்த்தகப்போர் என்றழைக்கப்படும் இந்த வர்த்தக நடவடிக்கையின் காரணமாக இந்தியாவும் பாதிப்பைச் சந்திக்கும் நிலையிலுள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்தியாவிலிருந்தும் இரும்பை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு பல மில்லியன் டன்களை ஏற்றுமதி செய்திட ஜிண்டால் உள்ளிட்ட நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அந்த எதிர்காலத்திட்டத்திற்கு இரும்புத் தாது நிறைந்த மலைகள் தேவை. கவுத்தி மலை காணாமல் போகப் போகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.