திருப்பூர்,
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையாலும் மருத்துவர்கள் அலட்சியத்தால் விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்ததாக உறவினர்கள் திங்களன்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் விஜயாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் , இவர் பத்மினி கார்டன் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம்போல் திங்களன்று மதியம் வீட்டில் மதிய உணவிற்கு பின் பணிக்கு வந்துகொண்டிருந்தபோது அவ்வழியே மின் கம்பம் ஏற்றி வந்த கிரேன் வாகனம் பக்கவாட்டில் வந்த பாலகிருஷ்ணன் மீது மோதியுள்ளது . இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை உறவினர்கள் உடனடியாக அரசு தலைமைமருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அப்போது முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல அறிவுருத்தியுள்ளனர். இதற்காக உறவினர்கள் தமிழக அரசின் 108 ஆம்புலன்சை கேட்டதற்கு மருத்துவர்கள் இரண்டு மணி நேரமாக ஆம்புலன்ஸ் இல்லை, ஓட்டுநரும் இல்லை என பதில் தெரிவித்துள்ளனர். பின்னர் உறவினர்கள் தனியார் ஆம்புலன்சை வரவழைக்க பின்பு மருத்துவர்கள் மாற்று ஓட்டுநர் மூலம் 108 ஆம்புலன்சை வழங்கியுள்ளனர். அந்த ஆம்புலன்ஸ் திருப்பூரில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்பு உயிரிழந்த கோபாலகிருஷ்ணனை அரசு மருத்துவமனைக்கே திரும்பி கொண்டு வந்த உறவினர்கள் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டதும், அம்புலன்ஸ் இல்லாததுமே கோபாலகிருஷ்ணன் உயிரிழப்புக்கு காரணம் என புகார் தெரிவித்து திருப்பூர் அரசு மருத்துவமனை வாயிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் விசாரனை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். ஆம்புலன்ஸ் தாமதத்தால் விபத்தில் படுகாயமடைந்த நபர் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.