கோவை,
அடிப்படை வசதிகள் செய்வதில் அலட்சியம் காட்டும் இருகூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெற்ற ஆவேசமிகு போராட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

கோவை இருகூர் பேரூராட்சியானது சமீபத்தில் சிறப்புநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதேநேரம், இங்குள்ள 18 வார்டுகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதிகளும் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாதது, நிதியின்மை போன்ற காரணங்களை காட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் தனி அதிகாரிகள் சாலை, சாக்கடை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளையும் செய்துதராமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். மேலும், கட்டிட உரிமம் பெறுவதற்கு, வரியினங்கள் செலுத்துவதற்கு, சான்றிதழ்கள் பெருவதற்கு சென்றால் அலைகழிப்பது மற்றும் லஞ்ச முறைகேட்டில் ஈடுபடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.

இதேபோல், ரயில்வே இருப்புப்பாதையை கடந்துதான் குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டிய அபாய நிலை இருந்து வருகிறது. இதனை போக்க அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தருகிறோம் என பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் வாக்குறுதியளித்து பல வருடங்கள் கடந்தவிட்டபோதும் இதுவரை அப்பணி தொடர்பான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் அச்சத்துடனேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிற நிலை உள்ளது. இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இருகூர் கிளைகளின் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடமும் கடந்த சில நாட்களாக தொடர் பிரச்சாரங்கள் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இருகூர் சந்தை பகுதியில் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,இருகூர் பேரூராட்சியை நோக்கி ஊர்வலமாகவும் செல்ல முயன்றனர். இதனையடுத்து இருகூர் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். இதைத்தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவர் கே.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் இருகூர் கிளையின் செயலாளர் ஆர்.சண்முகம், சூலூர் தாலுகாகுழு உறுப்பினர் எஸ்.ஸ்டாலின்குமார், எஸ்.ஜோதிபாசு, பார்த்தசாரதி, சிஐடியு சங்கத்தின் விஜயராகவன் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் இருகூர் பேரூராட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகளை துரிதமாக செய்து தருவதாகவும், மாநில அரசு மற்றும் ரயில்வே நிர்வாகம் செய்து தரவேண்டிய பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பரிந்துரை செய்வதாக ஒப்புதல் அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர்கள் கே.ராதாகிருஷ்ணன், கோதண்டராமன், பி.சுப்பிரமணியன், என்.நடராஜ், எஸ்.சேவியர் மற்றும் ஆர்.நாகராஜ், என்.மருதாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.