அசாம்:

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டிருக்கிறது. இது மத்திய பாஜக அரசின் திட்டமிட்ட சதி என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அசாம் மாநிலத்தில் 3.29 கோடி மக்கள் வசிக்கின்றனர். அசாம் மாநிலம் வங்கதேசத்தை ஒட்டி அமைந்துள்ளதால் இவர்கள் அசாம் மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்து வருகின்றனர். வங்கதேசத்தில் இருந்து பலர் அசாமில் குடியேறி வருவதாக புகார் எழுந்தது.  இதைத் தடுப்பதாக கூறி அங்கு பாஜக கூட்டணி அரசு தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயார் செய்து வருகிறது. இதற்காக அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் உறுதி செய்தல் என பல முறைகளில் அசாம் மாநில அதிகாரிகள் இந்த பதிவேட்டைத் தயார் செய்தனர். இதன் வரைவு பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. அப்போது எதிர்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோரின் பெயர்கள் விடுபட்டிருந்தது. அதனை சரி செய்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதே சேரத்தில் பாஜக கூட்டணி அரசு தயாரித்து வரும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் வங்கதேசத்தில் வசித்து வரும் இந்துக்களின் பெயரையும் சேர்த்திருந்தனர். இது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இன்று தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அசாம் மாநிலத்தில் 3.29 கோடி பேர் வசித்து வரும் நிலையில், 2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. மீதமுள்ள 40 லட்சம் பேரின் பெயரகள் இந்த பட்டியலில் விடுபட்டிருந்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று எதிரொலித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி முகமது சலீம் பேசுகையில் ‘‘மதத்தின் பெயரால் குடிமக்களிடம் பாகுபாடு காட்டுவது ஏற்கத்தக்கதல்ல’’ விடுபட்டவர்களின் பெயர்கள் மதபாகுபாடு இன்றி உடனே இணைத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் ‘‘தேசிய மக்கள் பதிவேடு பாரபட்சமற்றது. இது ஒரு வரைவு அறிக்கை மட்டுமே இறுதிப்பட்டியல் அல்ல. பெயர் இடம் பெறவில்லையென்று யாரும் அச்சப்பட வேண்டாம். பெயர் விடுபட்டவர்கள் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படும். என்று தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.