தூத்துக்குடி,
ஸ்டெர்லைட் நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணியாற்றுவதாக பொய்யான விளம்பரம் செய்வதை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதாக உ.வாசுகி குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வரலாறு காணாத சொத்துவரி உயர்வு ஏற்பட்டுள்ளது .உதாரணமாக கோவில்பட்டியில் உள்ள வஉசி நகர் உள்ள வீட்டின் பழைய வரி ரூ.327. புதியவரி உயர்வு ரூ.3250. இது மட்டும் இல்லாமல், கோவில்பட்டியில் உள்ள நகர கடைகளுக்கு பழைய வரி ரூ.950ல் இருந்து ரூ.30250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில் கோவில் பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரி கட்டா இயக்கம் நடைபெற்று வருகிறது .தூத்துக்குடியில் பனிமய மாதா கோவில் திருவிழா முடிவடைந்த உடன்தெருமுனை பிரச்சாரங்கள் நடைபெறவுள்ளன.

சேலம்- சென்னை பசுமை வழிச்சாலை விவசாயிகளிடம் எந்த வித முன் அறிவிப்பும் இல்லாமல் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன அவர்களிடம் யாரும்சந்தித்து பேச முடியாது. பேசுவதற்கே தடை விதிக்கிற ஒரு சூழல் தமிழகத்தில் நிலவி வருகிறது. எனவே இந்த தடைகளை உடைத்தெறியும் விதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 1 முதல் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை நடைபயணம் அறிவுத்துள்ளோம். எந்த தடை வந்தாலும் இந்த பயணத்தை நடத்துவோம் . எல்லாமே தனியார்மயமாக்கக் கூடிய இந்த சூழலில், தண்ணீர் என்பது மக்களுக்கு அரசு செய்யவேண்டிய சேவை இந்த அடிப்படை சேவையை வணிகமாகமாற்ற கூடிய ஏற்பாடு நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை மாநகராட்சி நிர்வாகம் தனது 60 வார்டுகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் குடிநீர் விநியோகத்தை சூயஸ் இன்ஃபா என்கிற பிரெஞ்சு கம்பெனிக்கு கொடுத்துள்ளது .இதனையொட்டி சமீபத்தில் மாநகராட்சி அதிகாரி மட்டும் நிர்வாகிகள் அளித்த பேட்டியில் இனிமேல் பொதுக் குழாய்கள் இருக்காது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். தனியார் கம்பெனி நிர்ணயிக்கும் விலையில் தண்ணீர் வாங்க வேண்டும், காசு இல்லாதவர்கள் தண்ணீர் பயன்படுத்தமுடியாது என்கிற போக்கை கொண்டு வருகின்றனர், இதனால் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், என்ற கோரிக்கையை முன் நிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர காட்சிகள் சேர்ந்து வருகின்ற ஜூலை 31ஆம் தேதி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது என அறிவித்துள்ளோம். அதுபோல் ஜனநாயகமாதர் சங்கம் சார்பில் பத்தாயிரம் குடும் பங்களை சந்தித்து உண்மையை எடுத்து சொல்லவும் உள்ளனர் .எனவே குடிநீரை தொடர்ச்சியாக அரசு மக்களுக்கு தரவேண்டிய அடிப்படை சேவையாக தொடரவேண்டும் , வணிகப் பொருளாக தண்ணீர் மாற்றப்படக் கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 56. இது ஆதி சேஷையா என்பவற்றின் தலைமையில் குழு அமைக்கப் பட்டு, அரசு வேலை வாய்ப்பை எப்படி சுருங்குவது, அரசு வேலைகளை தனியாருக்கு எப்படி கொடுப்பது என்ற பரிந்துரைகளை பெறுவதற்காக போடப்பட்ட குழு . சுமார் 95 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அரசின் இந்தஅரசாணை எதிர்காலத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே, இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்காக ரத்தம் சிந்தியபூமிதான் இந்த தூத்துக்குடி மண் ,சிந்திய ரத்தம் காயும் முன்பு கொல்லைப்புறமாக திறப்பதற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. ஸ்டெர்லைட் நிறுவனம் சமீபத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் “எங்களுடைய ஆலையை மீண்டும் திறந்து செயல்படுத்த அதிகாரிகளிடம் சேர்ந்து செயலாற்றி கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர். தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, மாசு கட்டுபாட்டு வாரியம் சீல் வைத்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் அவர்கள் எந்த அதிகாரிகளிடம் சேர்ந்து செயலாற்றிக்கொண்டுள்ளனர்.

தூத்துக்குடி மக்கள் தியாகம் வீண்போகக்கூடாது. எனவே, இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு மக்களோடு இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். ஸ்டெர்லைட் ஆலை தற்போது உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் என விளம்பரம் செய்து வருகிறது. ஆனால், கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஸ்டெர்லைட் நிறுவனம் உண்மையை திரித்து கூறியுள்ளது. மறைத்து கூறியுள்ளது என குறிப்பிட்டுள் ளது. தற்போது அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர்கள், சுமார் 14 ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள் ஆலையின் அருகில் வாழ்ந்து வருகின்றனர். இதில் 70 சதவீதம் பேர் தமிழ்நாட்டை சேர்த்தவர்கள் என கூறியுள்ளனர். 70 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என ஸ்டெர்லைட் ஆலை நிரூபிக்க தயாரா? பத்து நாட்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ராம்நாத் 800 முதல் 900 ஊழியர் என குறிப்பிட்டார். ஆனால், விளம்பரத்தில் 4000 ஊழியர்கள் என குறிப்பிட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் வெளியிடப்பட்ட கழிவுகள் அனுமதிக்கப்பட்டஅளவில் தான் உள்ளது என கூறுகின்றனர். அது உண்மைக்கு புறம்பானது என்பதை 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது .ஆலையால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சுழலை சரி செய்ய 100 கோடி ரூபாய் அபராதம்விதித்துள்ளது. தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் நீங்கள் தொடர்ந்து ஆபத்தான கழிவுகளை வெளியிட்டு வருகிறீர்கள் என எச்சரித்து நோட்டிஸ் அனுப்பியது. சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட போது சம்பத்தப்பட்ட அமைச்சர் எழுத்துமூலமாக அளித்த பதிலில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்ஆலையை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளின் தண்ணீர் அனைத்து விதமான உயிருக்கு கேடு விளைவிக்கும் அளவிற்குமோசமான நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையை வைத்து கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இத்தகைய செயலை பார்த்துக்கொண்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது. போராட்டக்காரர்களை ஓடி , ஓடி கைது செய்யும் காவல்துறை இப்படிப்பட்ட வதந்திகளை ஸ்டெர்லைட் நிறுவனம் விளம்பரம் என்கிற பேரில் பரப்புவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாமா?ஸ்டெர்லைட் ஆலையை ஆதரித்தால் நல்ல வாழ்க்கை, எதிர்த்தால் நரகவாழ்க்கை,என்பதை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் மேற்கொண்டு வருகிறது. நீங்கள் எங்களில் எத்தனை பேரைகைது செய்தாலும், சிறையில் அடைத்தாலும் உண்மையை வெளியில் கொண்டு வந்து தூத்துக்குடி மக்களுடைய வாழ்க்கையை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்று கூறினார். பேட்டியின்போது மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மாநகர செயலாளர் தா.ராஜா உடன் இருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.