மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்தால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி அதில் இருந்து அதிக அளவில் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட் டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வெள்ளியன்று நீர்வரத்து வினாடிக்கு 61 ஆயிரத்து 291 கன அடியாக இருந்த நிலையில், சனிக்கிழமையன்று 68 ஆயிரத்து 660 கன அடியாக அதிகரித்து. வெள்ளியன்று அணையில் இருந்து வினாடிக்கு 69 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், சனியன்று 68 ஆயிரத்து 498 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. அணை நீர்மட்டம் 120.30 அடியாக இருந்தது. ஞாயிறன்று தண்ணீர் வரத்து 59 ஆயிரத்து 135 கன அடியாக குறைந்தது. இதனால் நீர் திறப்பு 59 ஆயிரத்து 714 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120,25 அடியாக இருந்தது.காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் 9-வது நாளாக நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.