தீக்கதிர்

சாதி வெறியர்கள் அராஜகம் பேத்தி தலித் இளைஞரை மணந்ததால் தாத்தாவுக்கு பூசாரி வேலை மறுப்பு

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ளது அரங்குப்பட்டி கிராமம். இங்கு அரங்குப்பட்டி மற்றும் பாசிப்பட்டி கிராமங்களுக்குச் சொந்தமான ஸ்ரீ திரௌபதையம்மன் கோவில் உள்ளது. கோவில் பூசாரி யாக அ.வீரையா என்பவர் இருந்து வந்தார். கடந்த 22.08.2016 அன்று நடைபெற்ற கோவில் கும்பாபிசேகம் மற்றும் அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்ற மண்டகப்படி திருவிழா வரை வீரையாதான் பூசாரித் தொழிலை செய்து வந்துள்ளார்.  இந்நிலையில், இவரது மகன்வழிப் பேத்தி லதாதலித் வகுப்பைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதனால், பூசாரியின் குடும்பமே தீட்டுப்பட்டுவிட்டதாக ஊரில் உள்ள சாதி ஆதிக்க சக்திகள் ஊர்க்கூட்டம்போட்டுள்ளனர்.

உன் பேத்தி தலித்தை திருமணம் செய்ததால் உன்னையும் உன் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம் எனக் கூறியுள்ளனர். மேலும், 6.7.2018 அன்று நடைபெற்ற கோவில் திருவிழாவில் வீரையாவுக்கு பதிலாக சிங்காரம் என்பவரை பூசாரித்தொழில் செய்ய வைத்துள்ளனர். இத்தனை வருடங்களாக பணிசெய்த கோவிலுக்குச் சென்று சாமிகும்பிடக்கூட அனுமதிமறுக்கிறார்கள்; மீறி வந்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள் என வேதனையுடன் கூறுகிறார் வீரையா. பரம்பரையாகச் செய்துவந்த பூசாரித் தொழிலை தொடர்ந்து செய்யவும், தனக்கும், தனது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தி அன்னவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனைத் தொடர்ந்து மாநில மனித உரிமை ஆணையத்திற்கும் வீரையா புகார் அளித்துள்ளார்.

தீ.ஒ.முன்னணி கண்டனம்:
இதுதொடர்பாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் சி.அன்புமணவாளன் கூறும்போது, நடந்துள்ள சம்பவத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தலித் விரோதப் போக்கிலும், தீண்டாமை வன்கொடுமையிலும் ஈடுபட்டுள்ள சாதி ஆதிக்க சக்திகள் மீது வழக்குப் பதிவு செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும். வீரையாவை தொடர்ந்து பூசாரியாக இருப்பதற்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரையாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.