ஆதார் தகவல்களை வெளிப்படையாக வெளியிட்டு அதை ஹேக் செய்ய முடியுமா – அதாவது, திருட முடியுமா – என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா விடுத்த சவாலுக்கு, இணையதள ஹேக்கர் பதிலடி கொடுத்திருப்பது, ஆதார் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. சர்மாவின் சவாலை டுவிட்டரில் ஏராள மானோர் பாராட்டிய நிலையில், அடுத்த 8 மணி நேரத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எலியட் ஆன்டர்சன், சர்மாவின் ஆதார், பான் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அடுக்கடுக்காக டுவிட்டரில் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார். நாட்டு மக்களின் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் ஓட்டை விழுந்த ரெக்கார்டு போல திரும்பத் திரும்பக் கூறிவரும் நிலையில், பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒரு ஹேக்கர் மிக எளிதாக ஆதார் தகவல்களை ஹேக் செய்து வெளியிட்டு இருப்பது ஆதார் தகவல்களின் பாது காப்பை – ஒட்டுமொத்த இந்திய தேசத்து மக்களது தகவல்களின் பாதுகாப்பை – கேள்விக் குறியாக்கியுள்ளது.

தற்போது தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) தலைவராக இருப்பவர் ஆர்.எஸ். சர்மா. இவர் இதற்கு முன் ஆதார் எண் அளிக்கும் (யுஐடிஏஐ) இந்திய ஒருங்கிணைந்த அடையாள ஆணையத்தில் பணியாற்றி தற்போது டிராய்க்கு திரும்பியுள்ளார். ஆதார் தகவல்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு போதுமானது இல்லை என்று பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டி வரும் நிலையில் தான், சர்மா தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்டு சவால் விடுத்தார். ஆதார் தகவல்கள் மிகுந்த பாது காப்பாக இருப்பதால்தான் இப்படி துணிச்சலாக சவால் விடுக்கிறார் என்று கூறி பலரும் புகழ்ந்தனர். 2,850, ரீடீவிட்களும், 3 ஆயிரம் லைக்குகளும் சர்மாவுக்கு கிடைத்தன. ஆனால் சில மணி நேரங்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹேக்கரும், ஆன்லைன் வல்லுநருமான, எலியட் ஆன்டர்சன் ஆர்.எஸ்.சர்மாவின் அனைத்து விவரங்களையும் அடுக்கடுக்காக பதிவிட்டு இந்தியாவையே அதிர்ச்சியடைய வைத்தார்.

அதுமட்டுமல்ல, ‘‘நீங்கள் ஆதார் எண்ணை உங்கள் வங்கிக்கணக்கோடு இணைக்க வில்லை. நீங்கள் ஆதார் எண்ணுக்காக கொடுத்தது உங்களுடைய மொபைல் எண் இல்லை; அது உங்களுடைய தனிச்செயலாளருடையது’’ என்று வேறு சில உண்மைகளையும் போட்டு டைத்தார். அத்தோடு அவர் நிற்கவில்லை. பிரதமர் மோடிக்கும் சவால் விடுத்துள்ளார். ‘‘ஹாய் மோடி அவர்களே, உங்களது ஆதார் எண்ணை வெளியிடத் தயாரா’’ என்று கேட்டு கிண்டல் அடித்துள்ளார். சமீபத்தில் யோகா செய்வது தொடர்பாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி வேறு யாருக்கோ சவால் விட, தானும் அந்த சவாலை ஏற்றுக் கொள்வதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோடி, வேலையற்றவராய், விதவிதமாக யோகா செய்து அதை விதவிதமாக அப்டேட் செய்து சவாலில் வென்றதாக கூறிக்கொண்டார். பிரான்ஸ் ஹேக்கரின் சவாலை ஏற்று, ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவைதான் என்று நிரூபிக்கத் தயாரா மோடி அவர்களே?

Leave a Reply

You must be logged in to post a comment.