தூத்துக்குடி:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை என்று கூறியுள்ள வேதாந்தா நிறுவனம், ஆலையை மீண்டும் திறக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிலத்தடி நீரை நஞ்சாக்கிய வேதாந்தா குழுமத்தின் நிறுவனமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்களும் அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேரின் உயிரை காவு வாங்கியது தமிழக அரசின் காவல்துறை. மக்களின் போராட்டம் மக்களின் உயிர்ப்பலிக்கு பின்னரே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை என்று வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து எந்த அமிலக் கழிவும் வெளியாவதில்லை. சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை நிரூபிப்போம்’ என்று வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டத்தால் கடந்த மே மாதம் ஆலை மூடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட 2017-18 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில், கடந்த மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிகளுக்கான செப்பு உலோகத்தை உருக்கும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இயக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்ததுடன் பல்வேறு விளக்கங்கள் கேட்டு அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது. ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு ஆலையை திறக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் எந்த சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதை நிரூபிப்போம். இந்த ஆலையில் இருந்து எந்த அமிலக் கழிவும் வெளியாவதில்லை. எனவே நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று உள்ளூர் நிலத்தடி நீர் மையம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவது தான் அந்தப் பகுதியில் முக்கிய பிரச்சனையாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை மட்டும் அங்கு இல்லை. அனல் மின்நிலையம், சாயத் தொழிற்சாலைகள் மற்றும் சிறிய-பெரிய அளவிலான 60-க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளன. நாங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்தோம். இதுதொடர்பான பேச்சுவார்த்தைக்கு திறந்த மனதுடன் இருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.