புதுதில்லி;
மத்திய அரசின் விளம்பரங்களுக்காகக் கடந்த 3 நிதியாண்டுகளில் மட்டும் ரூ. ஆயிரத்து 600 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மோடி அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
மத்திய – மாநில அரசுகள் விளம்பரங்களுக்காகச் செய்த செலவு எவ்வளவு என்று, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் எழுத்துப்பூர்வமாக பதில் ஒன்றை அளித்துள்ளார். ‘டிவி, ரேடியோ, டிஜிட்டல் சினிமா, இண்டர்நெட் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற டிஜிட்டல் ஊடகங்களில் மத்திய அரசு சார்பில் விளம்பரங்கள் தரப்பட்டதற்காக மூன்று நிதியாண்டுகளில் ரூ. ஆயிரத்து 600 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2015-16 ஆம் நிதியாண்டில் ரூ. 531 கோடியே 60 லட்சமும், 2016-17ஆம் நிதியாண்டில் ரூ. 609 கோடியே 14 லட்சமும், 2017-18ஆம் நிதியாண்டில் ரூ. 468 கோடியே 93 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களைப் பயனாளிகளுக்குக் கொண்டு செல்லும் நோக்கில் மத்திய அரசு இந்த விளம்பரங்களைச் செய்தது’ என்று அந்த பதிலில் ரத்தோர் கூறியுள்ளார்.
அதேநேரம், மாநில அரசுகளின் விளம்பரங்கள் தொடர்பான செலவுப் பட்டியல் மத்திய அரசால் பராமரிக்கப்படவில்லை என்றும், அதுதொடர்பான தகவல்கள் எதுவும் இல்லை எனவும் ரத்தோர் மழுப்பியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: