கோவை;
அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அரசின் திட்டங்கள் குறித்து செய்திகளை தருகின்றன. ஆனால் அத்திட்டத்தின் பயன் யாருக்கானது என்பதை வர்க்கப் பார்வையோடு தீக்கதிர் நாளிதழ் மட்டுமே வாசகனிடம் கொண்டு சேர்க்கிறது என ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் சந்தா சேர்ப்பு நிகழ்வில் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா ஒப்படைப்பு சிறப்பு பேரவைக் கூட்டம் வியாழனன்று கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உற்சாகமாக நடைபெற்றது. அன்னூர், விளாங்குறிச்சி, எல்ஐசி யூனியன் அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், கணுவாய், உடையாம்பாளையம், கணபதி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சந்தா ஒப்படைப்பு சிறப்புப் பேரவைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அனைத்து இடங்களிலும் நேரில் பங்கேற்று கட்சியின் ஊழியர்களால் சேர்க்கப்பட்ட தீக்கதிர் நாளிதழ் சந்தா தொகையை பெற்றுக்கொண்டார். இதில் ஓராண்டு சந்தாக்கள் 350, ஆறு மாத சந்தாக்கள் 193 உட்பட மொத்தம் 560 சந்தாக்கள் சேர்க்கப்பட்டன. இதற்கான தொகை ரூ.6 லட்சத்து 98 ஆயிரம் முதல் தவணையாக ஒப்படைக்கப்பட்டது.

இதனை பெற்றுக்கொண்டு ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், கார்ப்ரேட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிற நிலையில் நமக்கான அரசியல் வழிகாட்டியாய் தீக்கதிரே முன்னிற்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர் ஒருவர் தீக்கதிர் நாளிதழை வாசிக்காமல் கட்சியின் அரசியல் முடிவுகளை புரிந்து கொள்ள முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் ஏராளமாக உள்ளன. இவை அரசின் திட்டங்கள் குறித்து செய்திகளை தருகின்றன. ஆனால், அத்திட்டத்தின் பயன் யாருக்கானது என்பதை வர்க்கப் பார்வையோடு தீக்கதிரே வெளிப்படுத்தும்.

இன்று கோவை மக்களின் குடிநீர் விநியோகம் தொடர்பாக சூயஸ் நிறுவனத்தோடு கோவை மாநகராட்சி போட்டிருக்கும் ஒப்பந்தம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை படித்திருப்பீர்கள். இத்திட்டம் யாருக்கானது, எந்த வர்க்கத்தை பாதுகாக்கும் என்பதை வர்க்கப் பார்வையோடு தீக்கதிரே வெளிப்படுத்தி வருகிறது. ஆகவே, இந்த சந்தா சேர்ப்பு இயக்கத்தை மேலும் தீவிரப்படுத்தி அதிக எண்ணிக்கையில் சந்தாக்களை சேர்த்து இலக்கை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

முன்னதாக, இப்பேரவைகளில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜய்குமார், என்.ஜெயபாலன், என்.பாலமூர்த்தி, கே.எஸ்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் யு.கே.வெள்ளிங்கிரி, என்.வி.தாமோதரன், என்.ஜாகீர், ஆர்.கேசவமணி, என்.ஆர்.முருகேசன், ஆர்.கோபால், முகமதுமுசீர், வி.சுரேஷ், எஸ்.புனிதா, எஸ்.விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒரே வார்டில் 125 தீக்கதிர்
கோவை உடையாம்பாளையம் 42 ஆவது மாநகராட்சி ஒரே வார்டில் மட்டும் முதல்கட்டமாக இதுவரை 125 தீக்கதிர் சந்தாக்கள் சேர்க்கப்பட்டு அதற்கான தொகை ஜி.ராமகிருஷ்ணனிடம் அப்பகுதி மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.