பனாஜி;
பசுக்கள் மற்றும் காளைகளை விற்பனைக்கோ, வளர்ப்புக்கோ கொண்டு செல்லும் வியாபாரிகளையும், அப்பாவிகளையும் சங்-பரிவாரத்தைச் சேர்ந்த பசு குண்டர்கள் அடித்துப் படுகொலை செய்வது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் இந்த வன்முறைகள் அதிகம் நடக்கின்றன. இதுபோன்று சட்டத்தைக் கையில் எடுத்து அப்பாவிகளை அடித்துக் கொல்வதை ஏற்க முடியாது; இவ்விஷயத்தில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியது. எனினும் மத்திய – மாநில அரசுகள் அதனைக் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
இந்நிலையில், கோவா மாநிலத்தில் மாட்டிறைச்சித் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இதற்கு பசுப் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு தாக்குதலில் ஈடுபடுபவர்களே காரணம் என்றும் பாஜக எம்எல்ஏ ஒருவரே கூறியுள்ளார்.

மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வரும் மாட்டிறைச்சியைப் பசு பாதுகாவலர்கள் தடுப்பதால், கோவா மக்களின் உணவு உரிமை பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருக்கும் அவர், பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து, மாட்டிறைச்சியைத் தடை செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. மனோகர் பாரிக்கர் முதல்வராக இருக்கிறார். தற்போது அங்கு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக எம்எல்ஏ மைக்கேல் லோபோ-தான் இவ்வாறு கூறியுள்ளார்.‘பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு அலையும் ஒரு சில கும்பல்கள், கோவா மாநிலத்துக்குள் மாட்டிறைச்சியை கொண்டு வருவதைத் தடுக்கின்றனர்; கோவா மாநில மக்களில் பெரும் பகுதியினரும், சுற்றுலாப்பயணிகளும் மாட்டிறைச்சியை விரும்பி உண்கின்றனர்; அப்படி இருக்கும் போது பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் சிலர் இதுபோன்று மாட்டிறைச்சியைத் தடை செய்வதால், மாட்டிறைச்சிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படுகிறது; கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து மாட்டிறைச்சி கொண்டுவரக்கூடாது என்று அரசு விரும்பினால், கோவா மாநிலத்திலேயே அரசு சான்றிதழோடு மாட்டிறைச்சி விற்கும் விற்பனைக் கூடத்தை தொடங்க வேண்டும்’ என்று மைக்கேல் லோபோ கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.