செல்ம்ஸ்போர்ட்:
இங்கிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்று வருகிறது.மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் அணியை,இந்திய அணி எதிர்கொண்டது.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.முரளி விஜய் (53 ரன்கள்),விராட் கோலி (68 ரன்கள்),ராகுல் (58 ரன்கள்),தினேஷ் கார்த்திக் (82 ரன்கள்),ஹர்திக் பாண்டியா (51 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 395 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.எசக்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாகப் பால் வால்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி பந்துவீச்சை சிரமமில்லாமல் எதிர்கொண்ட எசக்ஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 359 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 36 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிக்ஸை தொடங்கிய இந்திய அணி,கடைசி நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்தது.ராகுல் 36 ரன்னும், ரஹானே 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.மூன்று நாள் பயிற்சி ஆட்டம் எந்த அணிக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

இந்தியா – இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1-ஆம் தேதி புதனன்று பர்மிங்காமில் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.