ஸ்ரீநகர்;
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்பச் செய்யும் முயற்சிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் அக்கட்சியுடன் கூட்டணி ஆட்சி நடத்தியது ஒரு கோப்பை விஷத்தை அருந்தியது போன்றது என்றும் அம்மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில் 2014 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 87 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரசுக்கு 12 இடங்களும் கிடைத்தன. இதனால் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் சிறிது காலம் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றது. பின்னர் நேர் எதிர் கொள்கைகளை கொண்ட மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. ஆட்சியில் இருந்தாலும் பாஜக பல்வேறு நெருக்கடிகளையே கொடுத்து வந்தது. சிறுமி ஆசிபா கொலையாளிகளை பகிரங்கமாக ஆதரித்து பேரணி நடத்தியது. ஒருவரை அமைச்சராக்கவும் செய்தது.

இருகட்சிகளுக்கும் இடையே பல முரண்பாடுகள், நெருக்கடிக்கு இடையே கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்தது. இதனால் மெஹபூபா பதவி விலகினார். அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

விஷம் அருந்தியது போல
மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவன நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மெஹபூபா முப்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

காஷ்மீரில் மாநிலத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதையடுத்தே பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி முன் வந்தது. இருப்பினும் அது மிக மோசமான அனுபவத்தையே கொடுத்தது. மாநிலத்தின் நலனுக்கான எந்த ஒரு திட்டத்தையும் செய்ய பாஜக விடவில்லை. மாநிலத்தில் அமைதியை திரும்பச் செய்யும் முயற்சிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை.

ஒரு கோப்பை விஷத்தை அருந்தியது போலவே கூட்டணி அரசு இருந்தது. பாகிஸ்தானுடனான நல்லுறவு, காஷ்மீருக்கு சிறப்பு பொருளாதார திட்டம் என நான் கேட்ட எதையும் பிரதமர் மோடி ஏற்கவில்லை. பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ளது. திறந்த மனதுடன், காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க அவர் யோசனை தெரிவித்துள்ளார். அதை ஏற்று மத்திய அரசு காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முன் வர வேண்டும் என்று மெஹபூபா முப்தி கேட்டுக் கொண்டார்.இவ்வாறு மெஹபூபா முப்தி பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.