பெங்களூரு:
கர்நாடகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்றும், ‘வட கர்நாடகம்’ என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்றும் பாஜக புதிய பிரிவினை கோஷத்தை எழுப்பியுள்ளது.

கர்நாடக மக்களைத் துண்டாடி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இந்த வேலையில் பாஜக இறங்கியுள்ளது.
வடகர்நாடக தனிமாநிலக் கோரிக்கைக்காக, பாஜக எம்எல்ஏ ஒருவர் தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் ஆட்சியமைப்பதற்கான எண்ணிக்கை இல்லை. பாஜக-வை விட அதிகமான வாக்கு சதவிகிதத்தை காங்கிரஸ் பெற்றிருந்தது. ஆனால், அதற்குரிய இடங்களை அந்த கட்சி பெறவில்லை.

இதனால் காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைக்கு ஆதரவு அளித்தது. இந்த இரு கட்சிகளும் கூட்டணி சேர்வதன் மூலம் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இடங்கள் கிடைத்தன. அதனடிப்படையில் ஆட்சி அமைக்கவும் உரிமை கோரின.ஆனால், ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி குறுக்குவழியில் பாஜக ஆட்சியில் அமர்ந்தது. எடியூரப்பா முதல்வரானார். பின்னர் உச்ச நீதிமன்றத் தலையீட்டிற்குப் பின்னர், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஓட்டம் பிடித்தார். காங்கிரஸ் – மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் குமாரசாமி முதல்வரானார்.

அப்போதே, 2019 நாடாளுமன்றத் தேர்தலையும் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் இணைந்து சந்திக்கும் என்று குமாரசாமி அறிவித்தார். அவ்வாறு நடந்தால், கர்நாடகத்தின் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் இந்த கூட்டணியே கைப்பற்றும் என்று அரசியல் நோக்கர்கள் கூறினர். பாஜக-வும் இதை உணர்ந்தது.எனவே, இதனை எப்படி முறியடிப்பது என்ற யோசித்த பாஜக மாநிலப் பிரிவினை முழக்கத்தை கையில் எடுத்துள்ளது. கர்நாடகத்தில் மொத்தம் 30 மாவட்டங்கள் உள்ளன. இதில் மகாராஷ்டிரா – தெலுங்கானா மாநில எல்லைகளையொட்டியுள்ள பெலகாவி, தார்வார், தாவணகெரே, உத்தரகன்னடா, கொப்பல், பாகல்கோட்டை, விஜயாப்புரா, கலபுரகி, பீதர், பல்லாரி, கதக், ஹாவேரி, யாதகிரி ஆகிய 13 மாவட்டங்கள் வட கர்நாடகம் என்று அழைக்கப்படுகின்றன. இந்நிலையில் வடகர்நாடகப் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்பதே தற்போது பிரச்சனையாக ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்த உடனேயே வடகர்நாடகா வஞ்சிக்கப்பட்டுள்ளதாக சில தெருமுனை அமைப்புக்களைத் தூண்டிவிட்டு பேச வைத்தது. பாஜக தலைவர்களும் அவ்வப்போது இந்த கருத்துக்கு சூடேற்றினர். வடக்கு கர்நாடகத்திற்கும் குமாரசாமிதான் முதல்வர் என்பதை அவர் உணர வேண்டும் என்று, எடியூரப்பா கூறினார். முன்னாள் பிரதமர் தேவ கவுடா, அவரது மகன் குமாரசாமி ஆகியோர் முதல்வராக இருந்த போதெல்லாம் வடக்கு கர்நாடகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று பாஜக-வின் முன்னாள் முதல்வர் ஜெகதீஸ் ஷெட்டர் விமர்சித்தார்.

ஆனால், அவர்களுக்கு உரிய ஆதாரங்களுடன் தேவகவுடா பதிலளித்தார். மேலும் ஷெட்டர் உள்ளிட்ட பாஜக-வினர் இதுதொடர்பாக தன்னுடன் பொதுமேடையில் விவாதம் நடத்த தயாரா? என்றும் பிடியை இறுக்கினார். தப்பித்தால் போதும் என்று ஷெட்டர் ஓடி விட்டார்.
எனினும் வடக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-க்களான ஏ.எஸ்.பட்டீல் நடஹள்ளி, உமேஷ் கத்தி, ஸ்ரீராமுலு ஆகியோர் பகிரங்கமாக ‘வடக்கு கர்நாடகத்தை தனிமாநிலமாக பிரிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

இதற்காக எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்யவும் தயார் என்று இவர்கள் கூறியுள்ளனர். சுரங்க மாபியாக்களான ரெட்டி சகோதரர்களின் கூட்டாளிதான் ஸ்ரீராமுலு என்பதும் குறிப்பிடத்தக்கது.இதனிடையே, பாஜக-வால் தூண்டிவிடப்படும் வடகர்நாடக தனிமாநில போராட்டக்குழு தலைவர் சோமசேகர், ‘வட கர்நாடக தனிமாநிலக் கோரிக்கைக்காக ஆகஸ்ட் 2-ஆம் தேதி பந்த் போராட்டம் நடைப்பெறும்’ என்று அறிவித்துள்ளார். இதற்கு மடாதிபதிகள் உட்பட அனைரும் ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், தனிமாநிலத்தை அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்றாலும், இதற்கு மாநில அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதால், குமாரசாமி தனிமாநிலத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் பிரிவினை பேசியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: